கொரோனா வைரஸ் எதிரொலி; அருணாசலேஸ்வரர் கோவிலில் கிருமி நாசினி தெளிப்பு
கொரோனா வைரஸ் காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. நவீன கருவி மூலம் பக்தர்களை பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை,
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கிறார்கள். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு சுகாதார துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள்கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மக்கள் உட்காரும் இடங்கள், உண்டியல், கொடிமரம் என பல்வேறு இடங்களில் தெளிக்கப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்தனர். அவர்கள் கைகழுவ அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் கூறுகையில், கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். அவர்களை கைகழுவ அறிவுறுத்தி வருகிறோம். கை கழுவும் இடங்களில் சோப்பு கரைசல் வைக்கப்பட்டுள்ளது. கோவில் முழுவதும் காலை, மாலை இரு வேளைகளில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிருமி நாசினியும் தெளிக்கப்படுகிறது. பொதுமக்கள் கொரோனா வைரஸ் குறித்த விவரமும், பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் தெரிந்து கொள்ளும் விதமாக அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் 2 மருத்துவ குழுவினர் முகாமிட உள்ளனர். அவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களை நவீன கருவிகள் மூலம் நோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் பணியை மேற்கொள்ள உள்ளனர் என்றார்.
Related Tags :
Next Story