சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் கிருமிநாசினி மருந்து தெளிப்பு


சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் கிருமிநாசினி மருந்து தெளிப்பு
x
தினத்தந்தி 16 March 2020 9:30 PM GMT (Updated: 16 March 2020 5:55 PM GMT)

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

சத்தியமங்கலம்,

உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தி வரும் கொரோனோ இந்தியாவிலும் வாலாட்ட தொடங்கி உள்ளது. இதனால் மத்திய அரசின் உத்தரவின் பேரில் அந்த மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கை இறங்கியுள்ளன. அதில் ஒரு பகுதியாக பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோவில்களில் நோய் தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. சத்தியமங்கலம் அருகே புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. விசேஷ நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்கள் கூட பண்ணாரி அம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

இந்தநிலையில் கொரோனோ வைரஸ் பரவும் விதம் குறித்தும், பொதுமக்கள் நோய் தாக்காதவாறு எவ்வாறு தற்பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட அறிவிப்பு பலகைகள் கோவில் மண்டபங்களில் தொங்கவிடப்பட்டுள்ளன.

மேலும் பக்தர்கள் அதிகம் தங்கும் இடங்கள், வரிசையாக நின்று பண்ணாரி அம்மனை தரிசனம் செய்யும் இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் நோய் தடுப்பு கிருமி நாசினி மருந்துகளும் தெளிக்கப்பட்டன.

பண்ணாரி ஈரோடு மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து வாகனங்கள் பண்ணாரி வழியாகவே மற்ற ஊர்களுக்கு செல்கிறது. இதேபோல் ஈரோடு, திருப்பூர், கோவையில் இருந்து செல்லும் வாகனங்களும் பண்ணாரி வழியாகவே திம்பம் மலைப்பாதையை கடந்து செல்கின்றன. அதனால் பண்ணாரியில் 3 சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகளை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் நேற்று கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

உக்கரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கணேஷ் தலைமையில் மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரம் சிப்டு முறையில் குழுக்களாக பிரிந்து வாகனங்களுக்கு கிருமிநாசினி மருந்து தெளித்து வருகிறார்கள்.

Next Story