லாரி பழுதாகி நின்றதால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு


லாரி பழுதாகி நின்றதால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 16 March 2020 9:45 PM GMT (Updated: 16 March 2020 6:30 PM GMT)

லாாி பழுதாகி நின்றதால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை ஈரோடு வழியாக கர்நாடக மாநிலம் மைசூர் செல்லும் முக்கிய பாதையாகும். இந்த வழியாகத்தான் திண்டுக்கல்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அதனால் பஸ், லாரி, சரக்குவேன், இருசக்கர வாகனங்கள் ஓய்வின்றி சென்று வந்துகொண்டு இருக்கும்.

திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. குறுகிய இந்த கொண்டை ஊசி வளைவுகளை அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் கடக்கும்போது லாரிகள் பழுதாகி நிற்பதும், அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிப்படுவதும் நாள்தோறும் தொடர் கதையாகி வருகிறது.

இந்தநிலையில் மதுக்கரையில் இருந்து சிமெண்டு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று முன்தினம் இரவு மைசூருக்கு புறப்பட்டது. லாரியை குப்புசாமி என்பவர் ஓட்டினார்.

நேற்று காலை 6 மணி அளவில் இந்த லாரி திம்பம் மலைப்பாதையில் 6-வது கொண்டை ஊசி வளைவை கடக்க முயன்றது. அப்போது பழுதாகி நடுரோட்டிலேயே நின்றுவிட்டது. இதனால் இருபக்கம் இருந்தும் எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. காலை நேரம் என்பவதால் அதிக அளவில் வாகனங்கள் வரிசையில் நின்றன.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சத்தி போக்குவரத்து போலீசார் கிரேனுடன் சம்பவ இடத்துக்கு சென்றார்கள். முதலில் பழுதான லாரி ரோட்டின் ஓரத்துக்கு இழுத்துவரப்பட்டது. அதன்பின்னர் சுமார் 2 மணி நேர போக்குவரத்து பாதிப்புக்கு பிறகு வாகனங்கள் செல்ல தொடங்கின.திம்பம் மலைப்பாதையில் நடக்கும் போக்குவரத்து பாதிப்பு பிரச்சினை எப்போது தீருமோ? என்று வாகன ஓட்டிகள் புலம்பியபடி சென்றார்கள்.

Next Story