விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் - கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது


விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் - கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 16 March 2020 10:00 PM GMT (Updated: 16 March 2020 6:37 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களை சுகாதாரமாக வைத்திருத்தல் அவசியம். கைகள் மற்றும் முகங்களை அவ்வப்போது நன்கு சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்தும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். அலுவலக வளாகத்தில் யாரேனும் சிறிதளவு உடல் சோர்வு, காய்ச்சல், தும்மல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் தென்பட்டால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும்.

மேலும் அனைத்து அலுவலகங்களிலும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். அலுவலக வளாகங்களில் உள்ள கழிவறைகளை துப்புரவு பணியாளர்கள் மூலம் அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டும். கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனோ வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கவும், கோவில்களில் உள்ள கழிவறைகளை சுத்தமாக பராமரிக்கவும் இந்து சமய அறநிலையத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள், கால்நடைகளை பரிசோதனை செய்ய அணுகும்போது முகக்கவசம் அணிந்து மருத்துவம் மேற்கொள்ள வேண்டும். வணிக வளாகங்கள், பஸ், ரெயில் நிலையங்கள், அன்னதான கூடங்கள், தங்கும் விடுதிகள், தியேட்டர்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் கிருமி நாசினிகள் மற்றும் பிளிச்சிங் பவுடர் கொண்டு அவ்விடங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் வணிக வரித்துறை அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைந்திடும் வகையில் பதாகைகளை பெரிய அளவில் அமைத்திட வேண்டும். ஊராட்சி செயலாளர்கள் அந்தந்த கிராமங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். துப்புரவு பணியாளர்களை கொண்டு அங்கன்வாடி மையங்கள், தொடக்கப்பள்ளிகள், பொது கழிவறைகள், பஸ் நிறுத்தங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து ஓட்டல்களிலும் சுத்தமான முறையில் உணவு மற்றும் குடிநீர் வழங்குவதையும், தூய்மையான முறையில் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். போக்குவரத்துத்துறை அலுவலர்கள், மக்கள் பயன்படுத்தும் அனைத்து வகையான அரசு வாகனங்களில் நோய் எதிர்ப்பு மருந்துகளை உபயோகித்து அனைத்து பஸ்களையும் முழுமையாக சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களுக்கு விழிப்புணர்வுடன் செயல்பட அறிவுறுத்த வேண்டும். பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் அவ்வப்போது தங்கள் கைகள் மற்றும் முகத்தை நன்கு கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். இதனை பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், உதவி கலெக்டர் (பயிற்சி) கவிதா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story