அரசு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் பெரம்பலூரில் நாளை மறுநாள் நடக்கிறது


அரசு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் பெரம்பலூரில் நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 17 March 2020 4:00 AM IST (Updated: 17 March 2020 12:23 AM IST)
t-max-icont-min-icon

அரசு பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் பெரம்பலூரில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது.

பெரம்பலூர்,

அரசு பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வருகிற 19-ந் தேதி பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகத்தில் காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது. தடகள போட்டிகளில் 100, 200, 800, மீட்டர் ஓட்டப்பந்தயங்களும், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவை ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக நடத்தப்படுகிறது. இதில் ஆண்களுக்கு கூடுதலாக 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடக்கிறது. குழுப்போட்டிகளான இறகுப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கபடி, மேஜை பந்து, வாலிபால் ஆகியவை இருபாலருக்கும், கால்பந்து விளையாட்டு போட்டி ஆண்களுக்கு மட்டும் நடைபெற உள்ளது.

மேற்படி போட்டிகளில் அரசுத் துறைகளில் முழுநேர பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பயிற்றுனர்கள், காவல்துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள், விளையாட்டு அலுவலர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் உடற்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்கலாம். காவல்துறை, தீயணைப்பு துறையில் பணியாற்றும் சீருடை பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள், மின்சார வாரிய பணியாளர்கள் தன்னாட்சி அலுவலக பணியாளர்கள், அரசு பொதுத்துறை நிறுவன பணியாளர்கள், அரசு பணியில் சேர்ந்து 6 மாதம் ஆகியுள்ளவர்கள், அரசு அலுவலகங்களில் தற்காலிக மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் இந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இயலாது.

கோப்பை-பதக்கம்

போட்டிகளில் பங்கேற்க விரும்பும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் போட்டி நாளன்று ஒரு நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்து கொள்ளலாம். மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பவர்களுக்குரிய தினப்படி மற்றும் பயணப்படி ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் ஏற்க வேண்டும். விளையாட்டு போட்டிகளில் அதிக அளவில் சதவீதத்தின் அடிப்படையில் பங்கு கொள்ள உள்ள துறையினருக்கு கோப்பையும், விளையாட்டுப் போட்டிகளில் அதிக புள்ளிகளை குவிக்கும் துறையினருக்கு கேடயமும் மற்றும் தனிநபர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் அரசு ஊழியர்கள் தங்கள் துறை அலுவலக தலைவரிடம் பெற்ற அனுமதி கடிதத்தினை போட்டிகள் நடைபெறும் நாளன்று கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story