கடைகளின் மேற்கூரையை உடைத்து திருட்டு; வாலிபர் சிக்கினார்


கடைகளின் மேற்கூரையை உடைத்து திருட்டு; வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 17 March 2020 3:30 AM IST (Updated: 17 March 2020 12:52 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே 3 கடைகளின் மேற்கூரை சிமெண்டு ஓடுகளை உடைத்து ரூ.50 ஆயிரம் பொருட்களை திருடி சென்ற மர்மநபரை போலீசார் கைது செய்தனர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள போந்தவாக்கம் கிராமத்தில் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை உள்ளது. இதன் அருகில் நிர்மலா (வயது 32) என்பவர் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகாமையில் யாமினி (30) என்பவர் டீக்கடை, மணிகண்டன் (35) என்பவர் ஏசி மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவர்களது மூன்று கடைகளின் மேற்கூரைகளும் சிமெண்டு ஓடுகள் கொண்டவையாகும். இந்நிலையில் கடந்த 4-ந் தேதி இரவு மர்மநபர்கள் சிலர், 3 கடைகளின் மேற்கூரை சிமெண்டு ஓடுகளை உடைத்து பேன்சி கடையில் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், டீ மற்றும் ஏ.சி. கடைகளில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்று விட்டனர்.

இது குறித்து கடை உரிமையாளர்கள் பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

வாலிபர் சிக்கினார்

இந்த திருட்டு சம்பவம் மற்றும் ஊத்துக்கோட்டை போலீஸ் சரகத்தில் நடைபெற்ற இதர திருட்டு சம்வங்களில் ஈடுபட்ட திருடர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் அழகேசன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் சீதஞ்சேரியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள புதுநெல்லூர் கிராமத்தை சேர்ந்த குப்புசாமி என்பரின் மகன் சந்தானம் (30) என்று தெரிய வந்தது.

அவர் தான் போந்தவாக்கத்தில் 3 கடைகளில் திருடியவர் என்று விசாரணையில் தெரியவந்தது. இது மட்டுமில்லாமல் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் அவர் மீது பல திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து சந்தானத்தை போலீசார் கைது செய்து ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

Next Story