மத்திகிரி கால்நடை பண்ணையில் பயங்கர தீ


மத்திகிரி கால்நடை பண்ணையில் பயங்கர தீ
x
தினத்தந்தி 16 March 2020 11:00 PM GMT (Updated: 16 March 2020 7:38 PM GMT)

மத்திகிரி கால்நடை பண்ணையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மத்திகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரியில் கால்நடை பண்ணை உள்ளது. இந்த பண்ணை ஆசியாவிலேயே பெரிய கால்நடை பண்ணை ஆகும். இங்கு 300-க்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவை வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த கால்நடை பண்ணையில் ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் தீவனத்திற்காக மேய்ச்சல் நிலம் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இந்த மேய்ச்சல் நிலத்தில் புல் அறுக்கப்பட்டு ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்று இரவு கால்நடை பண்ணையில் குவித்து வைக்கப்பட்டிருந்த புல்லில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

விடிய, விடிய

இதில் புல் அனைத்தும் பயங்கரமாக தீப்பற்றி மளமளவென எரிந்தன. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஓசூர் சிப்காட் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் கட்டுக்குள் வரவில்லை. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னரே தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story