அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.23 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது வழக்கு
அரசு வேலை வாங்கித்தருவதாக பலரிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம்,
பரமக்குடி அருகே உள்ள மேலக்காவனூர் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியம் மகன் அலங்கார சார்லி. இவரின் உறவினர் ஆனந்தகுமார் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரை அலங்கார சார்லி உடன் இருந்து கவனித்து வந்துள்ளார். அப்போது அருகில் சிகிச்சை பெற்று வந்த சோழவந்தான் பகுதியை சேர்ந்த துரைப்பாண்டியன் அவர்களிடம் தனக்கு அரசு வேலை வாங்கி தருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய அலங்கார சார்லி மற்றும் ஆனந்தகுமார் ஆகியோர் தங்களுக்கும் தங்களது நண்பர்கள் உள்பட 12 பேருக்கும் அரசு வேலை வேண்டி ரூ.23 லட்சத்து 55 ஆயிரத்து 100-ஐ கொடுத்துள்ளனர். இந்த பணத்தினை துரைப்பாண்டியன் மற்றும் அவரின் நண்பரான காஞ்சீபுரம் முகமது ஜலீல் ஆகியோர் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித்தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். மேலும் பணத்தை திரும்ப கேட்டதற்கு, அவர்கள் மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் புகார் செய்யப்பட்டது. அவரின் உத்தரவின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து துரைப்பாண்டியன் மற்றும் முகமது ஜலீல் ஆகியோரை தேடி வருகின்றனர்.
நாகபட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை குருஞானசம்பந்தநகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராஜேஷ்பாபு. இவரிடம் ராமநாதபுரம் அருகே உள்ள அத்தியூத்து கிழக்குத்தெரு பகுதியை சேர்ந்த சகாபுதீன் மகன் யூசுப்அலி மற்றும் அவரின் தாயார் ஆமினாபீவி ஆகியோர் ராமநாதபுரத்தில் உள்ள தங்களது நிறுவனத்தை மேம்படுத்த ரூ.50 லட்சம் கொடுத்தால் வரும் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார்களாம்.
இதை நம்பிய ராஜேஷ்பாபு ரூ.35 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற கொண்ட தாயும், மகனும் பங்கு பணத்தை கொடுக்காமலும், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமலும் இருந்துள்ளனர். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேஷ்பாபு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் புகார் செய்தார். அவரின் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பரமக்குடி எஸ்.எஸ்.கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி மகன் மணிகண்டன். இவரிடம், அமர்லால் என்பவர் காஞ்சீபுரத்தில் உள்ள தனது ஜவுளிக்கடையை விரிவாக்கம் செய்வதற்கு ரூ.32 லட்சத்து 50 ஆயிரம் கடனாக வாங்கினாராம். பணத்தை பெற்றுக்கொண்ட அமர்லால் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story