மாவட்ட செய்திகள்

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: மழைக்கால நிவாரணம் வழங்கக்கோரி உப்பள தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் கலெக்டரிடம் மனு கொடுத்தனர் + "||" + People Defective meeting To provide monsoon relief Workers protest

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: மழைக்கால நிவாரணம் வழங்கக்கோரி உப்பள தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: மழைக்கால நிவாரணம் வழங்கக்கோரி உப்பள தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்
மழைக்கால நிவாரணம் வழங்கக்கோரி உப்பள தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வருவாய்) வி‌‌ஷ்ணுசந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மக்கள் மனு கொடுத்தனர்.


தூத்துக்குடி மாவட்ட உப்பு தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் பொன்ராஜ், செயலாளர் சங்கரன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்காலங்களில் வேலை இல்லாத நாட்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், பணியிடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்துதர வேண்டும், தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சம்பள ரசீது வழங்க வேண்டும்‘ என்று கூறி உள்ளனர்.

ஓட்டப்பிடாரம் யூனியன் 12-வது வார்டு கவுன்சிலர் சுப்புலட்சுமி கொடுத்த மனுவில், ‘ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஜெகவீரபாண்டியபுரம் கிராமத்தை சுற்றி பல கிராமங்கள் உள்ளன. அந்த கிராம மக்கள் ஜெகவீரபாண்டியபுரத்தில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு வந்து பஸ் ஏறி செல்வார்கள். சமீபகாலமாக இந்த பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிற்பது இல்லை. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட சிந்தாயாத்திரை மாதா பைபர் நாட்டுப்படகு மீனவர் நலச்சங்க தலைவர் ஆல்ட்ரின் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த பெர்க்மான்ஸ் என்பவர் படகில் மீன்பிடிக்க சென்ற 5 பேர், படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கினர். அந்த மீனவர்களை தருவைகுளத்தை சேர்ந்த மீனவர் சவுந்தரராஜ் மீட்டு கரைக்கு அழைத்து வந்தார். தொடர்ந்து 5 மீனவர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 3 பேர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் ஆவர். இவர்களுக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட அண்ணா சங்குகுளி தொழிலாளர் சங்க தலைவர் இசக்கிமுத்து கொடுத்த மனுவில், ‘திரேஸ்புரம் மாதவநாயர் காலனியில், முத்து, சங்கு குளியாட்கள் மீனவர் கூட்டுறவு சங்கம் ஏற்கனவே தொடங்கப்பட்டது. அப்போது கட்டப்பட்ட சங்க கட்டிடம் சேதம் அடைந்ததால் சங்கம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது அந்த இடம் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையில் உள்ளது. ஆகையால் அரசுக்கு சொந்தமான காலி இடத்தில் பொது மீனவ மக்கள் பயன்பெறும் வகையில் சுகாதார நிலையம் மற்றும் சமுதாய கூடம் அமைக்க வேண்டும்‘ என்று கூறி உள்ளார்.

எட்டயபுரம் அருகே உள்ள என்.வேடப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி முத்துப்பாண்டி என்பவர் கொடுத்த மனுவில், ‘நான் வளர்ச்சி குறைந்து ஊனமுற்றவர். எனக்கு எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காததால் பிழைக்க வழியின்றி சிரமப்பட்டு வருகிறேன். ஆகையால் எனக்கு அரசு இலவச பெட்டிக்கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறி உள்ளார்.

காடல்குடி கிழக்கு தெருவை சேர்ந்த மக்கள் தமிழ்புலிகள் கட்சி புதூர் ஒன்றிய செயலாளர் கரிகாலன் என்ற கணேசன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘காடல்குடி கிழக்கு தெருவில் 50-க்கும் மேற்பட்ட அருந்ததியர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் இருந்து மற்ற தெருக்களுக்கு செல்வதற்கு முறையான பாதை வசதி இல்லை. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்‘ என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அகில பாரத இந்து சேனா தமிழகம் அமைப்பின் மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன் கொடுத்த மனுவில், ‘தூத்துக்குடி சாமுவேல் புரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சில மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டாம் என்று கூறி உள்ளனர். இதுகுறித்து கேட்ட பெற்றோரையும் அவமானப்படுத்தி உள்ளனர். ஆகையால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறி உள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி நாம் தமிழர் கட்சி பட்டாணி கொடுத்த மனுவில், ‘தாமிரபரணி ஆற்றில் முறப்பநாடு முதல் ஆத்தூர் வரை உள்ள பகுதிகளில் இருக்கும் ஊர்களின் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் ஆற்றில் கழிவுநீர் கலப்பதையும், குப்பைகள் கொட்டப்படுவதையும் தடுக்க வேண்டும்‘ என்று கூறி இருந்தார்.

கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரத்தில் உள்ள ஆற்றுப்பாலம் வழியாக தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் பாலத்தில் பெரிய அளவில் ஓட்டை விழுந்து உள்ளது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் பாலத்தில் ஏற்பட்டு உள்ள ஓட்டையை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறி உள்ளார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க.வினர் கொடுத்த மனுவில், ‘தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள அனைத்து ஷேர் ஆட்டோக்களும் ஒரே வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. ஆகையால் பொதுமக்கள் நலன் கருதி, மாநகர பகுதிகளில் டவுன் பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் செல்லாத பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று வலியுறுத்தி உள்ளனர்.

கோவில்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பத்மாசங்கர் என்பவர் அடையாள அட்டைகளை கலெக்டர் அலுவலகம் முன்பு போட்டு குடும்பத்துடன் அமர்ந்து இருந்தார். அவர், ‘அரசு வீட்டுமனை பட்டா வழங்கி உள்ளது. அதே நேரத்தில், எனக்கு வீடு கட்ட முடியாத நிலை இருப்பதால், அரசு பசுமைவீடு கட்டித்தர வேண்டும்‘ என்று கோரிக்கை விடுத்தார்.

தூத்துக்குடி அருகே உள்ள குமாரகிரி பஞ்சாயத்து புதுக்கோட்டை பகுதி மக்கள் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வக்குமார் தலைமையில் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், புதுக்கோட்டையில் பல்வேறு அரசு அலுவலகங்கள் தனியார் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட குமாரகிரி பஞ்சாயத்து பகுதியில் உள்ள 20 செண்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பகுதியில் சிலர் திருமண மண்டபம், சமையல் அறை கூடம் உள்ளிட்டவற்றை அனுமதியின்றி கட்டி ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். ஆகையால் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.