பாகூர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம்-பரபரப்பு


பாகூர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம்-பரபரப்பு
x
தினத்தந்தி 17 March 2020 5:12 AM IST (Updated: 17 March 2020 5:12 AM IST)
t-max-icont-min-icon

பாகூர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகூர்,

பாகூர்-வில்லியனூர் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சாலையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் பாகூர் நகரப்பகுதியில் உள்ள மார்க்கெட் வீதியில் கழிவுநீர் வாய்க்காலை ஆக்கிரமித்தும், சாலையோரம் தட்டு வண்டியிலும் சிலர் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

எச்சரிக்கை

இந்தநிலையில் புதுச்சேரி தெற்குப்பகுதி மாவட்ட சப்-கலெக்டர் சஷ்வத் சவுரவ் உத்தரவின்பேரில் வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் போலீஸ் அதிகாரிகள் கடை கடையாக சென்று ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அப்புறப்படுத்துமாறு தெரிவித்ததுடன் அதன்பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

கால அவகாசம்

பாகூர் மார்க்கெட் வீதி சிவன்கோவில் அருகே நேற்று காலை பாகூர் தாசில்தார் குமரன், ஆணையர் மனோகரன், உதவிப் பொறியாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள், அதிகாரிகளிடம் நோட்டீஸ் வழங்காமலும், போதிய காலஅவகாசம் வழங்காமலும் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கடைகளை இழுத்து மூடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதையடுத்து பாகூர் தாசில்தார் குமரன், போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் இன்று (செவ்வாய்க்கிழமை) கூடுதலாக ஒருநாள் அவகாசம் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

இதையடுத்து மாலையில் கடைகள் திறக்கப்பட்டன. அப்பகுதியில் போக்குவரத்துக்கும், நடைபாதைக்கும் இடையூறாக இருந்த விளம்பர பேனர், பெயர் பலகைகளை வியாபாரிகள் அப்புறப்படுத்தினர்.

Next Story