கயத்தாறு அருகே கார் கவிழ்ந்து புதுமாப்பிள்ளை பலி திருமணமான ஒரு வாரத்தில் பரிதாபம்


கயத்தாறு அருகே கார் கவிழ்ந்து புதுமாப்பிள்ளை பலி திருமணமான ஒரு வாரத்தில் பரிதாபம்
x
தினத்தந்தி 18 March 2020 4:00 AM IST (Updated: 17 March 2020 5:13 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே கார் கவிழ்ந்த விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.

கயத்தாறு, 

கயத்தாறு அருகே கார் கவிழ்ந்த விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆஸ்பத்திரிக்கு... 

நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்தவர் அந்தோணி ரவீந்தர் (வயது 31). இவர் திருப்பூரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய தாயார் அந்தோணியம்மாள் (61). அந்தோணி ரவீந்தருக்கு வான்மதி (24) என்ற மனைவியும், ஜோஸ்ரீமசோதா (3) என்ற மகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக ஜோஸ்ரீமசோதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே அவளுக்கு கன்னியாகுமரியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிப்பதற்காக, நேற்று முன்தினம் இரவில் அந்தோணி ரவீந்தர் தன்னுடைய குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டார். அந்த காரை அந்தோணி ரவீந்தரின் நண்பரான திருப்பூர் அருகே தென்னம்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் திருநீலகண்டன் என்ற முகேஷ் (25) ஓட்டினார். காரில் அந்தோணி ரவீந்தரின் மற்றொரு நண்பரான தர்மபுரியைச் சேர்ந்த தினேஷ்குமாரும் (26) உடன் சென்றார்.

டிரைவர் சாவு 

நேற்று காலை 6 மணி அளவில் கயத்தாறு அருகே சவலாப்பேரி நாற்கரசாலை விலக்கு பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த திருநீலகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் காரில் இருந்த அந்தோணியம்மாள், அந்தோணி ரவீந்தர், வான்மதி ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர்.

உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், கயத்தாறு போலீசார் விரைந்து சென்று, இறந்த திருநீலகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் 

கார் கவிழ்ந்த விபத்தில் இறந்த திருநீலகண்டனுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவருடைய மனைவி சங்கவி (20).

நண்பரின் மகளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது, கார் கவிழ்ந்த விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story