நகை திருட்டு வழக்கில் போலீசார் விசாரித்ததால் சிறுமிக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை நெல்லை அருகே பரிதாபம்
நெல்லை அருகே நகை திருட்டு வழக்கில் போலீசார் விசாரித்ததால், சிறுமிக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குளம்,
நெல்லை அருகே நகை திருட்டு வழக்கில் போலீசார் விசாரித்ததால், சிறுமிக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.
தோழிகள்
நெல்லை அருகே சீதபற்பநல்லூரை அடுத்த வல்லவன்கோட்டை நடு தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மனைவி ஆவுடைதங்கம் (வயது 32).
அதே ஊரில் புளியமரத்து தெருவில் வசித்தவர் திருமலை முருகன் மனைவி வள்ளியம்மாள் (33). இவருடைய மகள் மகராசி (8). இவள், அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 3–ம் வகுப்பு படித்து வந்தாள்.
ஆவுடையம்மாளும், வள்ளியம்மாளும் தோழிகள் ஆவர். திருமலை முருகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் வள்ளியம்மாள் கூலி வேலைக்கு சென்று, தன்னுடைய மகளை வளர்த்து வந்தார்.
நகை திருட்டு
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவுடைதங்கத்தின் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது. பீரோவின் பூட்டை உடைக்காமல், சாவியால் பீரோவை திறந்து நகைகளை மர்மநபர் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், சீதபற்பநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆவுடைதங்கத்தின் வீட்டில் பீரோவின் சாவி வைக்கப்பட்டு இருந்த இடத்தை நன்கு தெரிந்த நபரே நகைளை திருடி இருக்கலாம் என்று போலீசார் கருதினர். எனவே ஆவுடைதங்கத்தின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் உறவினர்கள், தோழிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரித்ததால்...
இதுதொடர்பாக வள்ளியம்மாளிடம் விசாரிப்பதற்காக, அவரை சீதபற்பநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு வருமாறு போலீசார் அழைத்தனர். இதனால் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வள்ளியம்மாளை அவருடைய உறவினரான தெய்வேந்திரன் ஆலங்குளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார். பின்னர் இரவு 10.30 மணி அளவில் வள்ளியம்மாளிடம் விசாரணை நடத்தி முடித்த போலீசார் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
நகை திருட்டு வழக்கு தொடர்பாக தன்னிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் வள்ளியம்மாள் மனமுடைந்த நிலையில் இருந்தார். இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தனக்கு பிறகு தன்னுடைய குழந்தை அனாதையாகி விடும் என்று கருதியதால், மனதை கல்லாக்கி கொண்டு தன்னுடைய மகள் மகராசியை கொலை செய்து விட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கருதினார்.
மகளுக்கு விஷம் கொடுத்து...
அதன்படி அவர், வீட்டில் தூங்கி கொண்டிருந்த மகள் மகராசிக்கு பூச்சிக்கொல்லி மருந்தை குடிக்க கொடுத்தார். இதனால் அதனை குடித்த மகராசி சிறிதுநேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தாள். பின்னர் வள்ளியம்மாளும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.
நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் வள்ளியம்மாளின் வீட்டின் கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது மகராசி இறந்து கிடந்ததையும், வள்ளியம்மாள் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடியவாறு கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே வள்ளியம்மாளை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும், சீதபற்பநல்லூர் போலீசார் விரைந்து சென்று, இறந்த மகராசியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை திருட்டு வழக்கு தொடர்பாக போலீசார் விசாரித்ததால் மனமுடைந்த பெண், மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த தாய்–மகளின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
Related Tags :
Next Story