பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்


பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
x
தினத்தந்தி 17 March 2020 10:30 PM GMT (Updated: 17 March 2020 3:19 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெரம்பலூர், 

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தமிழக அரசு உத்தரவின்படி ஏற்கனவே 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முதல் பொறியியல் கல்லூரிகள், கலை கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் மார்ச் 31-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து கல்லூரி மாணவ- மாணவிகள் தாங்கள் பயிலும் கல்லூரி விடுதிகளில் இருந்து வெளியேறி தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். இதனால் நேற்று காலை பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவ- மாணவிகள் குவிந்திருந்தனர். 

மேலும் பெரம்பலூரில் இருந்து கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களுக்கு சென்ற அனைத்து பஸ்களிலும் மாணவ- மாணவிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவின்படி மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி அனைத்து சினிமா தியேட்டர்களும் நேற்று முதல் அடைக்கப்பட்டிருந்தன. தமிழக அரசின் மறு உத்தரவு வரும் வரை அனைத்து காட்சிகளையும் ரத்து செய்துள்ளதாக சினிமா தியேட்டர்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர். 

பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று காலை சிகிச்சைக்காக வந்த அனைத்து நோயாளிகளின் கைகளில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு நோயாளிகள் மருத்துவர்களை பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.


Next Story