நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 2–வது நாளாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் நேற்று 2–வது நாளாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
நெல்லை,
நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் நேற்று 2–வது நாளாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
உள்ளிருப்பு போராட்ட்ம்
பாளையங்கோட்டையில் நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் உள்ளூர் மட்டும், அல்லாமல் வெளியூர்களில் இருந்தும் மாணவர்கள் படித்து வருகிறார்கள். வெளியூரில் இருந்து படிக்கும் மாணவர்கள் தங்கு விடுதி வசதியை நம்பி கல்லூரியில் சேர்ந்தனர்.
ஆனால் கல்லூரி நிர்வாகம் சார்பில் இதுவரை மாணவர்களுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை. மாணவிகளுக்கு மட்டும் விடுதி வசதி உள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் நேற்று முன்தினம் காலை கல்லூரி வளாகத்தில் சாமியானா பந்தல் அமைத்து உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த பாத்திரங்கள், குடங்கள், உடைமைகளை பந்தல் முன்பு வைத்து இருந்தனர். அந்த சாமியானா பந்தலில் தற்காலிக விடுதி என்று எழுதப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் மாலையில் மாணவர்களுடன், போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுவதாக, முதல்வர் விக்டோரியா அறிவித்தார். இதையடுத்து மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியே சென்றனர். ஆனால் அவர்கள் வீட்டுக்கு செல்லவில்லை.
2–வது நாளாக...
நேற்று கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் 2–வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். மாணவர்கள் தங்கள் துணிகளை அங்கேயே துவைத்து காய வைத்தனர். சில மாணவர்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.
இது குறித்து மாணவர்கள் கூறும் போது, “தற்காலிக விடுதி கேட்டு போராடி வருகிறோம். கல்லூரி நிர்வாகம் சார்பில் இதுவரை எங்களை அழைத்து பேசவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம்“ என்றனர்.
கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவிகள் தங்கும் அறைகளை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு சென்றனர்.
Related Tags :
Next Story