குடியாத்தம் அருகே வாழைத்தோட்டத்தை நாசம் செய்த காட்டு யானைகள்


குடியாத்தம் அருகே வாழைத்தோட்டத்தை நாசம் செய்த காட்டு யானைகள்
x
தினத்தந்தி 17 March 2020 9:00 PM GMT (Updated: 17 March 2020 5:39 PM GMT)

குடியாத்தம் அருகே வாழைத் தோட்டத்தை காட்டு யானைகள் நாசம் செய்தது.

குடியாத்தம், 

குடியாத்தம் வனப்பகுதியை ஒட்டியபடி ஆந்திர மாநில வனப்பகுதியில் கவுண்டன்ய யானைகள் சரணாலயம் உள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகள் அடிக்கடி குடியாத்தம் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள தமிழக பகுதிகளான மோர்தானா, தனகொண்டபல்லி, கொட்டமிட்டா, குடிமிப்பட்டி, கொல்லப்பல்லி, கதிர்குளம், டி.பி.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

வனத்துறையினர் இந்த யானை கூட்டங்களை தொடர்ந்து விரட்டி வந்தனர். இதில் 15 யானைகள் கொண்ட கூட்டம் காட்பாடி வெடிமருந்து தொழிற்சாலை அருகே முகாமிட்டிருந்தது. வனத்துறையினர் தொடர்ந்து இந்த யானைகளை ஆந்திர மாநில எல்லைக்குள் விரட்டி வந்தனர். இருந்தாலும் அந்த யானைகள் மீண்டும் மீண்டும் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களில் ஒட்டியபடி உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை விளைவித்து வருகின்றன.

காட்பாடி வெடிமருந்து தொழிற்சாலை அருகே இருந்த யானைகள் கூட்டத்தை மாவட்ட வன அலுவலர் பார்கவ்தேஜா, உதவி வனப்பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் பல நாட்கள் போராடி குடியாத்தம் அருகே பரதராமி கந்தல்செருவு பகுதியில் உள்ள ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

ஆனால் சில தினங்களிலேயே ஆந்திர மாநில வனப்பகுதியில் உள்ள வனத்துறையினர் அந்த யானைகள் கூட்டத்தை மீண்டும் தமிழக பகுதிக்குள் விரட்டிவிட்டனர். அந்த யானைகள் கூட்டம் தனகொண்டபல்லி, கொல்லப்பல்லி உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக விளை நிலங்களுக்குள் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வந்தன.

நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் அருகே தனகொண்டபல்லி கிராமத்தில் சங்கர் என்பவரின் நிலத்துக்குள் புகுந்த 10-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் அங்கிருந்த வாழைத் தோட்டத்தில் புகுந்தது. அங்கு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை முற்றிலும் சேதப்படுத்தியது.

பின்னர் அங்கிருந்த கேழ்வரகு வயலுக்கு சென்று நாசப்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன் உள்ளிட்ட வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் அந்த யானைகளை பல மணி நேரம் போராடி பட்டாசுகள் வெடித்து விரட்டிவிட்டனர்.

இருப்பினும் அந்த யானைகள் கூட்டம் தமிழகம் மற்றும் ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளது. இந்த யானைகள் கூட்டம் ஆந்திர மாநில வனப்பகுதியில் விரட்டும் போது அங்கு தயாராக இருக்கும் ஆந்திர வனத்துறையினர் அதனை மீண்டும் தமிழகத்திற்கு உள்ளே விரட்டி விடுகின்றனர். இதனால் எல்லையோர கிராமங்களில் உள்ள விவசாயிகள் மிகவும் அச்சத்திலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story