கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: வேலூர் கோட்டை மூடப்பட்டது
கொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் கோட்டை மூடப்பட்டது. இதனால் கோட்டையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வேலூர்,
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் இந்தியாவில் மேலும் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், மால்கள், நீச்சல் குளங்கள், வணிகவளாகங்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களையும் வருகிற 31-ந் தேதி வரை மூடவேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள், அங்கன்வாடி மையங்கள், விளையாட்டு அரங்குகள், டாஸ்மாக் பார்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் வருகிற 31-ந் தேதி வரை மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
வேலூர் மாவட்டத்தில் காளைவிடும் திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டம், ஊர்வலங்கள் நடத்த அனுமதி கிடையாது. திருமண மண்டபங்களில் திருமணத்தை தவிர வேறு எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்றும், சுற்றுலா தலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வேலூரின் அடையாளமாக திகழும் கோட்டை நேற்று காலை மூடப்பட்டது. கோட்டை சுற்றுச்சுவர் நடைபாதைக்கு செல்லும் வாயில்களின் இரும்பு கதவுகள் மூடப்பட்டு, பூட்டு போடப்பட்டிருந்தது. கோட்டை முன்பு இரும்பு கம்பிகளால் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோட்டைக்கு வந்த வெளிமாநில, பிறமாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளை போலீசார் 31-ந் தேதி வரை கோட்டை மூடப்பட்டிருக்கும். அதுவரை இங்கு வரவேண்டாம் என்று கூறி திருப்பி அனுப்பினர்.
இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றனர். கோட்டைக்கு வந்த உள்ளூர்வாசிகள் கோட்டை பூங்கா மரத்தடியில் அமர்ந்து சிறிதுநேரம் பொழுதை கழித்து சென்றனர். கோட்டையில் உள்ள அருங்காட்சியகம், காவலர் பயிற்சிபள்ளியில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமே கோட்டைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலாப்பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல்துறை அதிகாரிகள் கூறுகையில், மத்திய அரசின் உத்தரவின்படி வருகிற 31-ந் தேதி வரை கோட்டை மூடப்பட்டிருக்கும். ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வழக்கமாக நடைபெறும் பூஜைகள் நடக்கும். ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. வருகிற 31-ந் தேதி வரை பொதுமக்கள் கோட்டைக்கு வரவேண்டாம் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story