கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு செல்ல தஞ்சை ரெயில் நிலையத்தில் அலைமோதிய மாணவர்கள் கூட்டம்


கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு செல்ல தஞ்சை ரெயில் நிலையத்தில் அலைமோதிய மாணவர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 17 March 2020 11:30 PM GMT (Updated: 17 March 2020 5:45 PM GMT)

கல்லூரிகளுக்கு தொடர்விடுமுறையால் சொந்த ஊருக்கு செல்ல தஞ்சை ரெயில் நிலையத்தில் மாணவர்கள் கூட்டம் அலைமோதியது.

தஞ்சாவூர்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் தமிழக அரசு அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. தஞ்சையில் தனியார் பல்கலைக்கழகங்கள், தமிழ்ப்பல்கலைக்கழகம், என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் பல்வேறு தனியார் கல்லூரிகள் உள்ளன.

கூட்டம் அலைமோதியது

இந்த பல்கலைக்கழகம், கல்லூரிகளில் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கல்லூரிகள் மூடப்பட்டதையடுத்து வெளிமாநிலம், வெளியூரை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.

இதற்காக நேற்று காலை அவர்கள் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு வந்தனர். திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்வதற்காக அவர்கள் திரண்டு வந்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் மாணவர்கள் கூட்டம் அலைமோதியது. திடீரென விடுமுறை விடப்பட்டதால் மாணவர்கள் முன்பதிவு செய்யவில்லை. இதனால் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நிரம்பி வழிந்தன. அதில் மாணவ, மாணவிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறினர்.

சொந்த ஊருக்கு வந்தனர்

இதேபோல் வெளியூர்களில் படிக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை விடப்பட்டதால் சொந்த ஊரான தஞ்சைக்கு ரெயில்களில் வந்தனர். இதனாலும் ரெயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Next Story