மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முறைகள் என்ன? சர்வதேச மருத்துவ நிபுணர்களுடன் சுகாதாரத்துறை தீவிர ஆலோசனை + "||" + Coronavirus Prevention Procedures?

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முறைகள் என்ன? சர்வதேச மருத்துவ நிபுணர்களுடன் சுகாதாரத்துறை தீவிர ஆலோசனை

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முறைகள் என்ன?  சர்வதேச மருத்துவ நிபுணர்களுடன் சுகாதாரத்துறை தீவிர ஆலோசனை
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முறைகள் என்ன? என்பது குறித்து சர்வதேச மருத்துவ நிபுணர்களுடன், சென்னையில் நடந்த கருத்தரங்கில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதனை சார்ந்த மருத்துவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர்.
சென்னை, 

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா அரங்கில், சர்வதேச மருத்துவ நிபுணர்களுடன், காணொலி காட்சி மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு முறைகள் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழ்நாடு கிளை தலைவர் டாக்டர் சி.என்.ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கருத்தரங்கில் உலக சுகாதார அமைப்பின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன், நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையத்தின் பொது சுகாதார நிபுணர் டாக்டர் எ.எஸ்.வாலன், அமெரிக்காவின் எர்கீஸ் தேசிய ஆராய்ச்சி மையத்தின் மூத்த நிபுணர் டாக்டர் விஜயகுமார் வேலு, ஆஸ்திரேலியாவின் நியுகேசில் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை மூத்த நிபுணர் டாக்டர் ஹேமலதா வர்தன் உள்ளிட்ட பல்வேறு நிபுணர்கள் காணொலி காட்சி மூலம் தங்கள் நாடுகளில் கொரோனா வைரசை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், ஆராய்ச்சிகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிவித்தனர். அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் மருத்துவர்கள் அவர்களுடன் கலந்துரையாடினர். இதைத்தொடர்ந்து அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தொடர் கண்காணிப்பு

கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் பல நாடுகளை பாதித்து உள்ளதால் மற்ற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மாதிரியான மருத்துவம் வழங்கப்பட்டு வருகிறது என்றும், பாதிக்கப்பட்ட நாடுகளில் எப்படி இந்த நோய் தடுப்பு முறையை கையாளுகிறார்கள் என்பது குறித்தும் இந்த கருத்தரங்கின் மூலம் சர்வதேச மருத்துவ நிபுணர்களுடன் கலந்துரையாடினோம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் உள்ள கட்டமைப்பு வசதிகளை மேலும் அதிகப்படுத்தி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வசதிகள் அரசு ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

மேலும், கோவில்கள், தேவாலயங்கள் உட்பட திருவிழாக்கள் நடக்கும் இடங்கள் மற்றும் ஜல்லிக்கட்டு போன்ற பொது நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகம் கூடாத வண்ணம் விழிப்புடன் இருக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கக் கூடாது அதேநேரத்தில், நோய் தொற்றும் பரவாமல் தடுக்க வேண்டும் என்பதால் தமிழக சுகாதாரத்துறை முழு வீச்சில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

எனவே இந்த விஷயத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுமக்கள் தங்களை சுகாதாரமாக வைத்து பாதுகாக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய பயணத்தை தவிர பிற பயணங்களை தவிர்க்க வேண்டும். சர்வதேச வல்லுனர்கள் கூறிய தகவலின்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணம் அடைந்துவிட்டாலும் வேறு ஒரு பாதிக்கப்பட்ட நபருடன் அவர் மீண்டும் தொடர்பில் இருந்தால் அவருக்கு மீண்டும் வைரஸ் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதையும் குறிப்பிட்டார்.

மருந்து கண்டுபிடித்தால்...

தமிழகத்தில் தற்போது பலர் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறுகின்றனர். அவ்வாறு கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறுவோர் அதை இந்திய மருந்து மற்றும் ஓமியோபதி இயக்குனரை அணுகி மருந்தை நிரூபிக்கும் பட்சத்தில் அம்மருந்துக்கு அங்கீகாரம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்திய ஆயுஷ் மற்றும் சித்தா அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எந்த விதமான மருந்துகளையும், உணவுகளையும் உட்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் வசந்தாமணி உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.