கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம் கல்வி நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள்- டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம் கல்வி நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள்- டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 18 March 2020 5:30 AM IST (Updated: 18 March 2020 1:17 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக கல்வி நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன. மேலும், பஸ், ரெயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஈரோடு,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், டாஸ்மாக் பார்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்டவை வருகிற 31-ந் தேதி வரை மூடப்படும் என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டு உள்ளார்.

அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிக்கூடங்கள், பயிற்சி நிறுவனங்கள் என ஈரோட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நேற்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் பள்ளிக்கூடங்களுக்கு ஆசிரிய-ஆசிரியைகள் வழக்கம்போல் பணிக்கு வந்தனர். மேலும், அலுவலக பணியும் நடந்தது. அதேசமயம் பொதுத்தேர்வுகள் வழக்கம்போல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை அறியாத மாணவ-மாணவிகள் சிலர் கல்வி நிறுவனங்களுக்கு வழக்கம்போல் சென்றனர். அங்கு விடுமுறை அறிவிப்பு பலகை இருந்ததை பார்த்துவிட்டு அவர்கள் வீட்டுக்கு திரும்பினர்.

காட்சிகள் ரத்து

சினிமா தியேட்டர்களுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளன. தியேட்டர்களின் முன்பு “அரசின் உத்தரவுப்படி காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது”, என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. காலையில் படம் பார்க்க வந்த பலர் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்ததை பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஈரோட்டில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த ஜவுளிச்சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஜவுளிக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. வெளிமாநில வியாபாரிகள் ஜவுளி வாங்க வரவில்லை. ஆனால் வெளிமாவட்டங்களை சேர்ந்த சிலர் ஜவுளி வாங்குவதற்காக வந்திருந்தனர். அவர்கள் சந்தை விடுமுறை விடப்பட்டதை அறிந்ததும் ஏமாற்றத்துடன் தங்களுடைய ஊர்களுக்கு திரும்பினார்கள்.

கிருமி நாசினி தெளிப்பு

பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களுக்கு நோய் பரவுதலை தடுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து ஈரோட்டுக்கு வந்த ரெயில்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா நேரில் பார்வையிட்டு பணியை துரிதப்படுத்தினார்.

இதேபோல் அரசு பஸ்களிலும் கிருமி நாசினி கடந்த சில நாட்களாக அடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தனியார் பஸ்களிலும் கிருமி நாசினி அடித்து, பஸ்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோட்டில் செல்லும் தனியார் பஸ்களுக்கும் கிருமி நாசினி அடிக்கப்பட்டது. இதில் பஸ்களின் வெளிப்பகுதி, படிக்கட்டுகள், கைப்பிடிகள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், பயணிகள் கைகளை சுத்தம் செய்துகொள்வதற்கு கிருமி நாசினி மருந்து வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு

ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. இதனால் நடைமேடைகள், டிக்கெட் எடுக்குமிடம் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ரெயில் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஒலி பெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் ஈரோடு பஸ் நிலையத்திலும் பயணிகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வை போலீசார் ஏற்படுத்தினர். 5 நபர்களுக்கு மேல் யாரும் ஒன்றாக சேர்ந்து நிற்க கூடாது என்று ஒலி பெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோட்டை ஈஸ்வரன், பெருமாள் கோவில்கள், பெரிய மாரியம்மன் கோவில்கள் உள்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் கைகளை கழுவ வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. அங்கு பக்தர்கள் சோப்பு போட்டு கைகளை கழுவிவிட்டு கோவில்களுக்கு செல்கிறார்கள். மேலும், கோவில்களில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதேபோல் அரசு ஆஸ்பத்திரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகைகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

இடையூறு

டாஸ்மாக் பார்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. இதனால் மதுபிரியர்கள் பலர் மதுவை வாங்கிவிட்டு சாலையோரமாக நின்று மது அருந்தினார்கள். இது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது.

பொதுமக்கள் ஒருசிலர் முககவசம் (மாஸ்க்) அணிந்தபடி சென்றனர். முககவசம் தட்டுப்பாடு காரணமாக பலர் அணிய முடியவில்லை. அதற்கு பதிலாக சிலர் கைக்குட்டைகளை பயன்படுத்தினர்.

Next Story