கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ‘வெளிநாடுகளில் இருந்து வரும் உறவினர்களை சந்திக்க வேண்டாம்’ சுகாதார அதிகாரி பேட்டி
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், பரவாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை, உறவினர்கள் யாரும் அவர்களது வீட்டிற்கு சென்று சந்திக்க வேண்டாம் என்று சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி,
கொரோனா அச்சுறுத்தலால் உலக நாடுகள் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் வரை 55 பேர் பூந்தமல்லியில் உள்ள பொது சுகாதார நிறுவனத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் தொடர்ந்து மருத்துவர்களால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதன்பிறகு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இது குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
சீனா, ஈரான், இத்தாலி, கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அங்கு சுற்றுலா, வேலை மற்றும் படிப்பு சம்பந்தமாக சென்றவர்கள் பலர் கொரோனா அச்சத்தால் தாயகம் திரும்பி வருகின்றனர்.
சொந்த ஊர்களுக்கு...
இதன் காரணமாக அவர்களை கொரோனா வைரஸ் தாக்கி இருக்கிறதா? என்பதை சோதிக்கும் வண்ணம் சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர்களை நேரடியாக பூந்தமல்லியில் உள்ள பொது சுகாதார நிறுவனத்திற்கு அழைத்து வந்து தனியாக உள்ள அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு எந்தவித நோய் தொற்றும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு அவர்களின் உறவினர்கள் அழைக்கப்பட்டு அவர்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
வீட்டில் பார்க்க வேண்டாம்
மேலும் பரிசோதனை முடிந்து நேற்று 18 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆஸ்துமா, ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் இந்த நோய் எளிதில் தாக்கும் வாய்ப்பு இருப்பதால், அவர்களை தொடர்ந்து 14 நாட்கள் இங்கு தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்.
அதன் பிறகு பாதிப்பு இருக்குமானால் உரிய பாதுகாப்புடன் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
மேலும், குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் உறவினர்களை 15 நாட்களுக்கு அவர்களது வீட்டுக்கு சென்று யாரும் பார்க்கவேண்டும் அவர்கள் பார்க்க வந்தாலும் உங்கள் வீட்டில் அனுமதிக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
. அப்போது, உடன் சுகாதார துணை இயக்குனர் பிரபாகரன் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் இருந்தனர்.
Related Tags :
Next Story