கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம் அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம் அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 18 March 2020 5:00 AM IST (Updated: 18 March 2020 2:50 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது.

விருதுநகர்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசும் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்த மட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என முதல்-அமைச்சர் அறிவித்திருந்த போதிலும் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

விடுமுறை

தமிழகம் முழுவதும் அனைத்து தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்குகள், உடற்பயிற்சி மையங்கள், பூங்காக்கள் அருங்காட்சியகங்கள் ஆகியவற்றை இந்த மாத இறுதி வரை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பார் மற்றும் தனியார் பார்களும் 15 நாட்கள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மூடப்பட்டன

விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள 27 தியேட்டர்கள் மூடப்பட்டன. அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச்சென்றனர். இதற்காக சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது.

தடுப்பு நடவடிக்கை

மாவட்ட நிர்வாகம் விருதுநகர் பழைய பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் அனைத்து பஸ்களிலும் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்துள்ளது.

இதேபோன்று விருதுநகரை கடந்து செல்லும் அனைத்து ஆம்னி பஸ்களையும் விருதுநகர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஆம்னி பஸ்களிலும் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள்

மாவட்டம் முழுவதும் செயல்படும் அரசு அலுவலகங்களில் உள்ளாட்சி அமைப்பு மூலம் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள அரசு அலுவலகங்கள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஆகியவற்றில் விருதுநகர் நகராட்சி நிர்வாகம் கிருமி நாசினி தெளிக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதேபோன்று விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து வார்டுகளிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிப்புடன் வரும் நபர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

ரெயில் நிலையம்

கொல்லத்தில் இருந்து வரும் ரெயில் ராஜபாளையத்துக்கு வந்தவுடன் ரெயில் பெட்டிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க ராஜபாளையம் நகராட்சி மூலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதேபோன்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகர் மாவட்டத்துக்குள் நுழையும்போது தேவைப்பட்டால் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் சந்திப்பு ரெயில் நிலையத்தில் அதிக ரெயில்கள் வந்து செல்லும் நிலை உள்ளதால் ரெயில்வே நிர்வாகம் ரெயில் நிலையம் முழுவதும் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்துள்ளது.

சிவகாசி

சிவகாசியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அனைத்து அறைகளிலும் நகராட்சி சுகாதார அதிகாரிகளின் உதவியுடன் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதே போல் பணி மனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்கள் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சிவகாசி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்கள் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகள் அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு கொரோனா குறித்தும், அதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கருத்தரங்கம் மூலம் விளக்கினர்.

கல்லூரி

வி.பி.எம்.எம்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வி.பி.எம்.எம்.கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.பி.எம்.சங்கர், தாளாளர் பழனிச்செல்வி சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நாட்டுநலப்பணித்திட்ட மாணவி கவுசல்யா வரவேற்றார். கல்லூரி இயக்குனர் சபரி மாலா, முதல்வர் செந்தாமரை லட்சுமி, வி.பி.எம்.எம். மகளிர் செவிலியர் கல்லூரி முதல்வர்பிரிசில்லா இன்பரதி, துணைமுதல்வர்கவிதா எலிசபெத் ஆகியோர் விழிப்புணர்வு உரையாற்றினர். நாட்டுநலப்பணித்திட்ட மாணவி தாரணி நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் பரமேஸ்வரி அமலரசி, வீரலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

முக கவசம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட உரிமைக்குரல் ஓட்டுனர் தொழிற்சங்கம் சார்பாக ஓட்டுனர்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அழகுராஜா தலைமை தாங்கினார். இணை செயலாளர் யோகாசுந்தர் முன்னிலை வகித்தார்.

மேலும் நகரின் அனைத்து இடங்களுக்கும் சென்று வாடகை கார் ஓட்டுனர்களுக்கு முக கவசம் வழங்கியதோடு விழிப்புணர்வு பிரசாரமும் செய்தனர்.

பள்ளிக்கூடம்

மேலதாயில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வெம்பக்கோட்டை யூனியன் ஆணையாளர் சிவகுமார் தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காளிராஜன் பள்ளி மாணவ- மாணவியர்களிடம்கொரோனா வைரஸ் பரவுவது பற்றியும், தடுக்கும் வழிமுறை குறித்தும், கைகளை சுத்தமாக வைத்திருப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தார். துணைவட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) லியாகத்அலி மற்றும் ஆரம்பசுகாதார நிலைய ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். தாயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்தானம் நன்றி கூறினார்.

ராஜபாளையம் பகுதியில் கோவில்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் நகராட்சி நிர்வாகம் சார்பாக கிருமி நாசினி தெளிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

தனி வார்டு திறப்பு

ஆலங்குளம் அருகிலுள்ளகல்லமநாயக்கர்பட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கென்று முன் எச்சரிக்கையாக 5 படுக்கை கொண்ட தனி வார்டு ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆலங்குளம் பகுதியில் அதிகமாக பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஊராட்சியிலும் முக்கியமான இடங்களில் மருந்து தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆர்.ரெட்டியபட்டி பஸ் நிறுத்தம், ஊராட்சி அலுவலகம், மருத்துவமனை வளாகம் ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருவதாக ஆர். ரெட்டியபட்டி சுகாதார ஆய்வாளர் சமுத்திரம் தெரிவித்தார்.

Next Story