கடலூர் முதுநகரில் மாயமான வாலிபர் கழுத்தை அறுத்து கொலை உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை


கடலூர் முதுநகரில் மாயமான வாலிபர் கழுத்தை அறுத்து கொலை உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
x
தினத்தந்தி 18 March 2020 12:30 AM GMT (Updated: 17 March 2020 9:51 PM GMT)

கடலூர் முதுநகரில் வாலிபர் மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் முன்னிலையில் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் சிவானந்தபுரம் கே.வி.ரெட்டி தெருவை சேர்ந்தவர் தினே‌‌ஷ் பெஞ்சமின். இவருடைய மகன் ஜெய்வின் ஜோசப் (வயது 18). கடலூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த ஜெய்வின் ஜோசப், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற அவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.

செல்போன் பதிவு

இதுகுறித்து அவரது தாய் பிரதீபா, காணாமல் போன தனது மகனை மீட்டு தரக்கோரி கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர் ரவி தமிழ்வாணன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் ஜெய்வின் ஜோசப்பின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அவர் தனது நண்பர்களான காத்தவராயன் மகன் விஜய் (21), ஞானசேகரன் மகன் பிரபா என்கிற பிரபாகரன்(27) ஆகியோரிடம் அடிக்கடி பேசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் அவர்கள் நெய்வேலி மற்றும் காரைக்காடு பகுதியை சேர்ந்த 5 பேருடன் சேர்ந்து ஜெய்வின் ஜோசப்பின் கழுத்தை அறுத்து கொலை செய்து, உடலை உப்பனாறு அருகே புதைத்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய், பிரபா ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் ஜெய்வின் ஜோசப்பின் உடலை புதைத்ததாக விஜய், பிரபா ஆகியோர் கூறிய இடத்தில் தோண்டி, உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி விஜய், பிரபா ஆகியோரை காரைக்காடு உப்பனாறு பகுதிக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் கூறிய இடத்தில் கடலூர் தாசில்தார் செல்வகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி முன்னிலையில் ஜெய்வின் ஜோசப்பின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் அங்கேயே மருத்துவ குழுவினர் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதன் பிறகு அங்கேயே மீண்டும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பரபரப்பு

மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள நெய்வேலியை சேர்ந்த 2 பேர், காரைக்காட்டை சேர்ந்த 2 பேர், ஈச்சங்காட்டை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story