கொரோனா வைரஸ் எதிரொலி: பூங்கா, தியேட்டர்கள் மூடல் கோவில்கள் வெறிச்சோடின


கொரோனா வைரஸ் எதிரொலி: பூங்கா, தியேட்டர்கள் மூடல் கோவில்கள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 18 March 2020 12:00 AM GMT (Updated: 17 March 2020 10:18 PM GMT)

கொரோனா வைரஸ் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் பூங்கா, தியேட்டாகள் மூடப்பட்டன. கோவில்கள் வெறிச்சோடின.

கடலூர்,

சீனாவில் கோர தாண்டவமாடிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் பொதுஇடங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதையும், வெளியூர்களுக்கு பயணம் செய்வதையும், கோவில்களில் விழாக்கள் நடத்துவதையும் தவிர்த்திடுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளில் செயல்பட்டு வந்த அனைத்து பார்களையும் மூட வேண்டும் என உத்தரவிட்டது.

விளையாட்டு மைதானம்

அதன்படி நேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள 45 மதுபான பார்களும் மூடப்பட்டன. மேலும் கடலூரில் உள்ள 4 தியேட்டர்களும், நகராட்சிக்கு சொந்தமான பூங்காக்களும் மூடப்பட்டன. இதனால் நேற்று காலை பூங்காக்கள் மற்றும் தியேட்டர்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது.

மேலும் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்துக்கு நேற்று அதிகாலையில் நடைபயிற்சிக்காக வந்த பொதுமக்கள், நுழைவு வாயில் கதவு மூடப்பட்டிருந்ததால், நடைபயிற்சி மேற்கொள்ளாமல் வீட்டுக்கு திரும்பி சென்றனர். மேலும் எப்போதும் கூட்டம் நிரம்பி காணப்படும், கடலூர் சில்வர் பீச்சும் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாலும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதாலும், சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

வெறிச்சோடிய கோவில்கள்

இதுதவிர சிதம்பரம், விருத்தாசலம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும், பூங்காக்களும் மூடப்பட்டன. மேலும் சிதம்பரம் நடராஜர் கோவில், தில்லை காளியம்மன் கோவில், கடலூர் பாடலீஸ்வரர் கோவில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி, வேலுடையான்பட்டு முருகன் கோவில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் மற்றும் கொளஞ்சியப்பர் கோவில், ஸ்ரீமு‌‌ஷ்ணம் பூவராகசாமி, பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் நேற்று பயணிகள் குறைந்த அளவிலேயே வந்து சென்றதால் ரெயில் நிலையமே வெறிச்சோடி கிடந்தது.

வியாபாரம் பாதிப்பு

ஆனால் மாவட்டத்தில் உள்ள வணிக வளாகங்கள், மருந்து கடைகள், ஆஸ்பத்திரிகள், காய்கறி மார்க்கெட்டுகள், மளிகை கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை வழக்கம்போல் திறக்கப்பட்டன. மேலும் பஸ்கள், வாகனங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. ஆனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடந்ததால் வணிகர்களுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டது.

Next Story