திருப்பூர் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட தொடங்கின


திருப்பூர் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட தொடங்கின
x
தினத்தந்தி 17 March 2020 10:28 PM GMT (Updated: 17 March 2020 10:28 PM GMT)

திருப்பூர் ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்ட 27 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட தொடங்கி உள்ளன.

திருப்பூர்,

திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் வடமாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் வருகின்றனர். இதனால் திருப்பூர் ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். தற்போது திருப்பூர் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ரெயில் நிலையத்தில் தானியங்கி நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் ரெயில் நிலையத்தில் 27 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டது. அதன்படி திருப்பூர் ரெயில் நிலைய வளாகம், டிக்கெட் முன்பதிவு மையம், 1, 2-வது நடைமேடை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு செய்யும் வகையில் கட்டுப்பாட்டு அறை 2-வது நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதமாக நடைபெற்று வந்த இந்த பணிகள் நிறைவடைந்து கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட தொடங்கியுள்ளன. மேலும் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது ரெயில் நிலையத்தில் மேலும் 13 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவடைந்ததும் கட்டுப்பாட்டு அறை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.


Next Story