2020-2021-ம் ஆண்டில் ரூ.12 ஆயிரத்து 522 கோடி கடன் வழங்க இலக்கு: கலெக்டர் விஜயகார்த்திகேயன் தகவல்


2020-2021-ம் ஆண்டில் ரூ.12 ஆயிரத்து 522 கோடி கடன் வழங்க இலக்கு: கலெக்டர் விஜயகார்த்திகேயன் தகவல்
x
தினத்தந்தி 18 March 2020 4:28 AM IST (Updated: 18 March 2020 4:28 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 2020-2021-ம் ஆண்டில் ரூ.12 ஆயிரத்து 522 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி மூலமாக வருடாந்திர கடன் திட்ட கையேடு வெளியிடும் நிகழ்ச்சி நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. 2020-2021-ம் ஆண்டுக்கான கடன் திட்ட கையேட்டை கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டார்.

இதுகுறித்து கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் முன்னோடி வங்கியின் மூலம் குறிப்பிட்ட இலக்கீட்டு அடிப்படையில் கடன் திட்ட கையேடு வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் 2020-2021-ம் ஆண்டுக்கான முன்னுரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கீடு ரூ.12 ஆயிரத்து 522 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விவசாயம் சார்ந்த துறைகளுக்கு ரூ.3 ஆயிரத்து 349 கோடியும், சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.7 ஆயிரத்து 436 கோடியும், மற்ற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.1,737 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு கடன் திட்டத்தை விட இந்த ஆண்டு ரூ.486 கோடி அதிகமாகும். இந்த திட்டத்தின் அடிப்படையில் அனைத்து வங்கிகள் மற்றும் அரசுத்துறைகள் இணைந்து செயல்பட்டு கடன் திட்டத்தின்படி இலக்கை அடைந்து மாவட்டத்தின் சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும் வகையில் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story