பா.ஜனதா நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருந்த நிலையில் துணை சபாநாயகர் கிருஷ்ணா ரெட்டி திடீர் ராஜினாமா


பா.ஜனதா நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருந்த நிலையில்   துணை சபாநாயகர் கிருஷ்ணா ரெட்டி திடீர் ராஜினாமா
x
தினத்தந்தி 17 March 2020 11:06 PM GMT (Updated: 17 March 2020 11:06 PM GMT)

பா.ஜனதா நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருந்த நிலையில், துணை சபாநாயகர் கிருஷ்ணா ரெட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி சட்டசபை தொகுதியில் இருந்து ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் கிருஷ்ணா ரெட்டி.

கூட்டணி அரசில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் சபாநாயகராகவும், கிருஷ்ணா ரெட்டி துணை சபாநாயகராகவும் பணியாற்றினர். கூட்டணி அரசு கவிழ்ந்து பா.ஜனதா அரசு அமைந்ததும் ரமேஷ்குமார் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

ஆனால் கிருஷ்ணா ரெட்டி துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்து வந்தார். இதனால் கிருஷ்ணா ரெட்டி மீது சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்தனர். இது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

ராஜினாமா கடிதம்

இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் கிருஷ்ணா ரெட்டி மீது பா.ஜனதா நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர சபாநாயகர் காகேரியிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்து இருந்தது.

இதன் மீது விவாதம் நடத்த சபாநாயகர் காகேரியும் அனுமதி வழங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று நடந்த கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரில் கிருஷ்ணா ரெட்டி மீது கொண்டு வரப்பட உள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் நடைபெற இருந்தது. அதன்படி நேற்று கூட்டம் தொடங்கி நடந்து கொண்டு இருந்தது.

அப்போது சபாநாயகர் காகேரி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது கர்நாடக சட்டசபை துணை சபாநாயகராக கிருஷ்ணா ரெட்டி பணியாற்றினார். அவர் மீது பா.ஜனதா நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர என்னிடம் கடிதம் கொடுத்து இருந்தது. அதன் மீது இன்று(நேற்று) விவாதம் நடைபெற இருந்தது.

ஆனால் துணை சபாநாயகர் கிருஷ்ணா ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். அவர் ராஜினாமா கடிதத்தை என்னிடம் கொடுத்துள்ளார். இதனால் அவர் மீது கொண்டு வரப்பட இருந்த நம்பிக்கையில்லா தீ்ர்மானம் கைவிடப்படுகிறது. மேலும் கர்நாடக சட்டசபைக்கு விரைவில் புதிய துணை சபாநாயகர் ேதர்ந்து எடுக்கப்படுவார் என்று சபாநாயகர் காகேரி அறிவித்தார்.

ஆனந்த் மாமணி எம்.எல்.ஏ.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் புதிய துணை சபாநாயகராக பா.ஜனதாவை சேர்ந்த ஆனந்த் மாமணி எம்.எல்.ஏ. தேர்ந்து எடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனந்த் மாமணி எம்.எல்.ஏ., பெலகாவி மாவட்டம் சவதத்தி எல்லம்மா தொகுதியில் இருந்து கர்நாடக சட்ட சபைக்கு ேதர்வு செய்யப் பட்டவர் ஆவார்.

Next Story