கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்பட்டது இது வரலாற்றில் முதல் முறை


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க   ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்பட்டது   இது வரலாற்றில் முதல் முறை
x
தினத்தந்தி 17 March 2020 11:47 PM GMT (Updated: 17 March 2020 11:47 PM GMT)

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மராட்டியத்தில் உலக புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபா கோவில் மற்றும் பிரசித்தி பெற்ற பல கோவில்களும் மூடப்பட்டன.

மும்பை, 

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

எனவே கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் மாலை மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் மூடப்பட்டது. உஸ்மனாபாத்தில் உள்ள துலிஜா பவானி கோவிலும் மூடப்பட்டது.

இந்த நிலையில் உலக பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோவில் நேற்று மாலை 3 மணி அளவில் மூடப்பட்டது. இங்கு தினமும் உள்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டு பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

வரலாற்றில் முதல் முறை

இதுகுறித்து ஷீரடி சாய்பாபா கோவில் செய்தி தொடர்பாளர் சுனில் தாம்பே கூறுகையில், ‘‘வரலாற்றில் முதல் முறையாக ஷீரடி சாய்பாபா கோவிலை மூடி உள்ளோம். கொரோனா வைரஸ் பரவல் குறையும் வரை கோவில் மூடப்பட்டு இருக்கும்’’ என்றார்.

மேலும் மராட்டியத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிங்கனாப்பூர் சனி பகவான் கோவிலும் மூடப்பட்டது.

இதேபோல மும்பை வால்கேஷ்வரில் உள்ள பபுல்நாத் கோவில், ஜாவேரி பஜார் அருகே உள்ள மும்பா தேவி கோவில், மகாலெட்சுமியில் உள்ள மகாலெட்சுமி கோவிலும் வருகிற 31-ந் தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பிரார்த்தனை

மும்பை மாகிமில் உள்ள புனித மிக்கேல் தேவாலயத்திலும் இன்று (புதன்கிழமை) நடக்கும் ஆராதனையில் பொது மக்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலய பிரார்த்தனைகள் ஆன்லைனில் ஒளிபரப்பப்பட உள்ளது.

Next Story