புதுவை மாநிலத்தில் முதல் பாதிப்பு: மாகியில் மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்


புதுவை மாநிலத்தில் முதல் பாதிப்பு: மாகியில் மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்
x
தினத்தந்தி 18 March 2020 5:17 AM IST (Updated: 18 March 2020 5:17 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலம் மாகி பிராந்தியத்தில் மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாடும் வைரஸ் தாக்குதலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மூதாட்டி

புதுவையிலும் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புதுவை மாநிலத்தின் ஒரு பிராந்தியமான மாகி (கேரள மாநில பகுதியில் உள்ளது) சாலக்கரை பகுதியை சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவர் கடந்த வாரம் துபாயிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பினார்.

அப்போது அவருக்கு சளி, காய்ச்சல் போன்றவை இருந்துள்ளன. இது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறி ஆகும். இதற்காக அவர் கோழிக்கோடு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் அப்போது அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்படவில்லை.

தாக்குதல் உறுதியானது

இருந்தபோதிலும் அவர் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டார். வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்படவே மாகி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தனிமையில் வைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. சோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை

இதைத்தொடர்ந்து அந்த மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்தார்.

மேலும் தற்போது அந்த மூதாட்டியின் உறவினர்களும் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

முதல் பாதிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாமல் இருந்தது.

இந்தநிலையில் மாகி பிராந்தியத்தில் மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு முதன் முதலாக உறுதி செய்யப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story