கொரோனா வைரஸ் குறித்து அலட்சியமாக கருத்து வெளியிட்ட டாக்டருக்கு நோட்டீஸ் மாநில மருத்துவ கவுன்சில் நடவடிக்கை
கொரோனா வைரஸ் குறித்து அலட்சியமாக கருத்துகள் வெளியிட்ட டாக்டருக்கு மராட்டிய மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மும்பை,
மும்பை தாதரை சேர்ந்த டாக்டர் அனில் பாட்டீல். இவர் கொரோனா வைரஸ் குறித்து மத்திய அரசு வழங்கி உள்ள ஆலோசனைகளுக்கு எதிரான கருத்துக்களை திரும்ப திரும்ப தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான அவரது பேச்சு அடங்கிய வீடியோ வைரலாகியது.
இதையடுத்து விளக்கம் கேட்டு டாக்டர் அனில் பாட்டீலுக்கு மராட்டிய மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸ் பற்றி மருத்துவ கவுன்சில் தலைவர் சிவகுமார் உத்தேகர் கூறியதாவது:-
அலட்சிய கருத்துகள்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. மேலும் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்திய வெயிலுக்கு தாக்குபிடிக்காது என்று டாக்டர் அனில் பாட்டீல் கூறியுள்ளார். மேலும் முக கவச ஆலைகளுக்கு வியாபாரத்தை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில் இந்த வைரஸ் பற்றி பெரிதுபடுத்தப்படுகிறது என்று தெரிவித்து உள்ளார்.
2002-ம் ஆண்டு சீனாவில் சுவாச தொற்று நோய் உருவானதாகவும், அது இந்தியாவை தாக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
அவரது அலட்சிய கருத்துகள், தனிப்பட்ட சுகாதாரம் குறித்து கவனக்குறைவாக இருக்க மக்களை ஊக்குவிக்கக்கூடும். எனவே நாங்கள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அதில் அவரது கருத்துகளுக்கு ஏதேனும் உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரம் உள்ளதா? என கேட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story