கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது
கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சுறுத்தலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது.
மும்பை,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. மராட்டியத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க மாநில அரசும் தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு நடவடிக்கையாக 31-ந் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் (மால்கள்), விளையாட்டு அரங்குகள் உள்ளிட்டவற்றை மூட அரசு உத்தரவிட்டது. இதுதவிர பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது.
கிருமி நாசினி
குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் வழக்கமான விடுமுறை கால பயணங்களை தவிர்த்து வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மும்பையில் தியேட்டர்களும், வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளதால் மக்கள் பொழுதை போக்க தவித்து வருகிறார்கள். கடற்கரைக்கு செல்ல விரும்பி அங்கு செல்ல தொடங்கினர். இதை அறிந்த போலீசார் ஜூகு கடற்கரைக்கு மக்கள் வர தடை விதித்தனர். இதனால் அந்த கடற்கரையில் மக்களை காணாமல் அலைகளும் ஓய்வெடுக்கின்றன.
அரசு, தனியார் அலுவலகங்களில் கிருமிநாசினியால் கையை கழுவாமல் ஒருவரையும் உள்ளே அனுப்புவதில்லை. சில அலுவலங்களில் தெர்மா மீட்டர் மூலம் சோதனையும் நடத்தப்படுகிறது.
இயல்பு வாழ்க்கை
மார்க்கெட், ஆஸ்பத்திரி, என திரும்பும் திசையெங்கும் கொரோனா வைரஸ் குறித்த பீதி நிலவுகிறது. இதனால் மக்கள் கூடும் இடங்களில் வழக்கமான உற்சாகம் இல்லை. பல கோவில்கள் மூடப்பட்டதால், பக்தர்கள் உற்சாகம் இழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பலர் முக கவசம் அணிந்து செல்ல தொடங்கி உள்ளனர். ஆனால் மற்றொரு தரப்பினர் எந்தவித பதற்றமும் இன்றி வீதிகளில் திரியவும் செய்கிறார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், ‘எங்கு பார்த்தாலும் கொரோனா வைரஸ் பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது. இதனால் வெளியே செல்லவே பயமாக உள்ளது. குழந்தைகளை வெளியே அனுப்பவும் தயக்கமாக இருக்கிறது. எப்போதுதான் இந்த கொரோனா வைரஸ் ஒழியுமோ... என்று நினைக்க தோன்றுகிறது’ என்றனர்.
Related Tags :
Next Story