விவசாயிக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளிக்கு 3 ஆண்டு ஜெயில் வள்ளியூர் கோர்ட்டு தீர்ப்பு
மரம் வெட்டும் தொழிலாளிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வள்ளியூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
வள்ளியூர்,
வள்ளியூர் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய வழக்கில் மரம் வெட்டும் தொழிலாளிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வள்ளியூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
அரிவாள் வெட்டு
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கன்னத்திகுளத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். விவசாயி. அவருடைய மனைவி பார்வதி. இவர்கள் கடந்த 16–9–2012 அன்று தங்கள் விவசாய தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள உறவினர் கணேஷ்குமார் என்பவரது தோட்டத்தில் மரம் வெட்டும் சத்தத்தை கேட்டு அங்கு சென்று பாலசுப்பிரமணியனும், அவரது மனைவி பார்வதியும் பார்த்துள்ளனர்.
அப்போது அங்கு வள்ளியூர் அருகே உள்ள சியோன்மலையை சேர்ந்த ஜெபகுமார் என்பவர் மரத்தை வெட்டி கொண்டிருந்துள்ளார். இதனை பாலசுப்பிரமணியன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் பாலசுப்பிரமணியனுக்கும், ஜெபகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஜெபகுமார், தான் கையில் வைத்திருந்த அரிவாளால் பாலசுப்பிரமணியனை வெட்டினார்.
ஜெயில் தண்டனை
இச்சம்பவம் குறித்து பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி மாயகிருஷ்ணன் விசாரித்து ஜெபகுமாருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story