ஆவின் பாலக ஊழியர்களுக்கு முகக்கவசம்; தளவாய்சுந்தரம் வழங்கினார்


ஆவின் பாலக ஊழியர்களுக்கு முகக்கவசம்;  தளவாய்சுந்தரம் வழங்கினார்
x
தினத்தந்தி 18 March 2020 10:15 PM GMT (Updated: 18 March 2020 1:35 PM GMT)

நாகர்கோவிலில் ஆவின் பாலக ஊழியர்களுக்கு முகக்கவசத்தை தளவாய்சுந்தரம் வழங்கினார்.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பெரும்பாலான கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து வேலை செய்கிறார்கள்.

வெளியில் நடமாடும் பொதுமக்களும் முகக்கவசம் அணிய தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள ஆவின் பாலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன் தலைமை தாங்கினார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்துகொண்டு ஊழியர்களுக்கு முகக்கவசத்தை வழங்கினார். மேலும் முகக்கவசம் அணிந்து தான் பணியாற்ற வேண்டும் என்றும், பாலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இதற்காக கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை ஆவின் பாலகத்துக்கு தளவாய்சுந்தரம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், சேவியர் மனோகரன், திலக், ஜெயசந்திரன், டாரதி சாம்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நாகர்கோவிலில் மீதமுள்ள ஆவின் பாலக ஊழியர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முகக்கவசம் மற்றும் திரவம் வழங்கப்பட உள்ளது.

அதன்பிறகு நாகர்கோவில் மாநகர அ.தி.மு.க. மகளிரணி சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி அண்ணா பஸ் நிலையம் அருகே நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பங்கேற்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வினியோகத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் பஸ் நிலையத்தை ஓட்டியுள்ள கடைகளுக்கும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. இதில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்துகொண்டனர்.

Next Story