கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கோவில், பஸ்நிலையம், பள்ளி, வணிக வளாகங்களில் கிருமி நாசினி தெளிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கோவில், பஸ்நிலையம், பள்ளி, வணிக வளாகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர் சாந்தா தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வார்டினை கலெக்டர் சாந்தா பார்வையிட்டார். அப்போது மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் தர்மலிங்கம், இருக்கை மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜா உடனிருந்தார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக டாக்டர்கள், அலுவலர்கள் கையாண்டு, பெரம்பலூரை கொரோனா வைரஸ் பாதிப்பில்லாத மாவட்டமாக தொடர்ந்திட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.
மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், அவர் களது உறவினர்களின் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத் தேர்வு மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு அலுவலகம், நீச்சல் குளம் உள்ளிட்டவைகளும் மூடப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களில் உள்ளே செல்வதற்கு முன்பு சோப்பு போட்டு கைகழுவுவதற்கு, அலுவலகம் முன்பு தயார் நிலையில் வாளியில் தண்ணீர் மற்றும் சோப்பு உள்ளது.
பெரம்பலூர் நகராட்சி சார்பில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் அரசு பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தனியார் பஸ்களுக்கும், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், ஆய்வாளர் செல்வக்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதே போல் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து புறப்படும் அரசு பஸ்களிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மற்றும் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களும் கொரோனா வைரசுக்கு பயந்து முகக்கவசம், கையுறைகள் அணிந்திருந்ததை காணமுடிந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர், மதனகோபாலசுவாமி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் கிருமி நாசினி தெளிப்பான் மூலம் தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதே போல் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாமினை நடத்தி வருகின்றனர். முகாமிற்கு பேருராட்சி செயல் அலுவலர் சதீஷ்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அரசு மருத்துவர் ரஞ்சன், சுகாதார ஆய்வாளர் மணி ஆகியோர் ஆலோசனை வழங்கினர். அதுமட்டுமின்றி லெப்பைக்குடிக்காடு பஸ் நிலையம், அரசு பள்ளிகள், வணிக வளாகங்கள், பஸ்கள், ஆட்டோக்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் துப்புரவு பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதே போல் எசனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி மருத்துவ அலுவலர் டாக்டர்கள் பிருந்தா, மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெளிநாடுகளிலிருந்து பெரம்பலூர் வந்த 33 பேர் தொடர் கண்காணிப்பு
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக வெளிநாடுகளில் வேலை செய்த பலர், அண்மையில் சொந்த ஊருக்கு திரும்பினர். இதில், பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 33 பேர், அவரவர் இல்லங்களில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி தெரிவித்தார். இந்த தொடர் கண்காணிப்பில் உள்ள நபர்களது வீட்டில் உள்ளவர்கள் வெளியிடங்களுக்கு செல்லக் கூடாது. அவர்களை பார்க்க, சந்திக்க வெளிஆட்களும் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதி சுகாதாரப் பணியாளர்கள் இவர்களை நாள்தோறும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 28 நாள்களுக்குப் பிறகு இவர்களுக்கு கொரோனா தாக்குதல் அறிகுறி இல்லாதபட்சத்தில், அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாக்டர் கீதாராணி தெரிவித்தார்.
முககவசம்-கையுறைகள் தட்டுப்பாடு
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுத்துறை அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் பணிபுரிபவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பிற்காக முககவசம், கையுறைகள் அணிந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் முககவசம், கையுறைகளை அணிந்து பணியாற்றி வருகின்றனர். மேலும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் முககவசம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் முககவசம், கையுறைகளின் விலை சற்று அதிகரித்துள்ளது. விலை அதிகரித்தாலும், தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் மருந்து கடைகளில் கூட முககவசம், கையுறைகள் கிடைப்பது அரிதாகிவிட்டது. அந்த அளவுக்கு முககவசம், கையுறைகள் தட்டுப்பாடு மாவட்டத்தில் நிலவுகிறது.
Related Tags :
Next Story