கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: வண்ணாரப்பேட்டை முஸ்லிம்கள் போராட்டம் ஒத்திவைப்பு
வண்ணாரப்பேட்டையில் 33 நாட்களாக நடந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
சென்னை,
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கடந்த மாதம் 14-ந் தேதி முதல் சென்னை வண்ணாரப்பேட்டையில் ‘சென்னை ஷாகீன்பாக்’ என்ற பெயரில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முஸ்லிம் மதகுருக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல தலைவர்கள் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி வந்தனர். பல்வேறு தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, போராட்டக்குழு நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதையடுத்து கடந்த 33 நாட்களாக நடந்த போராட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், ‘தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பல்வேறு தலைவர்களின் வேண்டுகோளை ஏற்றும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். நிலைமை சீரானதும் போராட்டக்குழு நிர்வாகிகள் கலந்து ஆலோசனை செய்து அடுத்தகட்ட முடிவை அறிவிப்போம். இம்மாதம் 31-ந் தேதிக்கு பின்னர் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்’ என்று கூறினர். நிறைவாக தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. இதை அடுத்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story