கணவர் உயிரோடு எரித்து கொலை: பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை
கணவரை உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது கீழக்கொடுமலூர். இந்த ஊரைச்சேர்ந்தவர் கருப்பையா மகன் ஆறுமுகம் (வயது 29). இவரது மனைவி போதும்பொண்ணு(28). இவருக்கும் ஆறுமுகத்தின் தம்பி உறவு முறையான அதேபகுதியை சேர்ந்த வேல்முருகன்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ஆறுமுகம் மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக எண்ணிய போதும்பொண்ணு மற்றும் வேல்முருகன் ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி இரவு வீட்டிற்கு வந்த ஆறுமுகத்தை இருவரும் சேர்ந்து கம்பி மற்றும் அரிவாளால் தாக்கி உள்ளனர். இதில் ஆறுமுகம் உயிர் ஊசலாடி கொண்டிருந்ததால் கொலை செய்ய முடிவு செய்து தூணில் கட்டிவைத்து மண்எண்ணெய்யை ஊற்றி உயிரோடு எரித்து கொலை செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆறுமுகத்தின் தாய் சண்முகவள்ளி அளித்த புகாரின் அடிப்படையில் முதுகுளத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து போதும்பொண்ணு, வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
வழக்கினை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம் கணவனை கொலை செய்த போதும்பொண்ணு, வேல்முருகன் ஆகியோருக்கு தலா ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் போதும்பொண்ணுவிற்கு ரூ.2 ஆயிரமும், வேல்முருகனுக்கு ரூ.3 ஆயிரமும் அபராதம் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கருணாகரன் ஆஜரானார்.
Related Tags :
Next Story