கொரோனா வைரஸ் காரணமாக சென்னை வந்து செல்லவேண்டிய 62 விமானங்கள் ரத்து


கொரோனா வைரஸ் காரணமாக   சென்னை வந்து செல்லவேண்டிய 62 விமானங்கள் ரத்து
x
தினத்தந்தி 19 March 2020 4:00 AM IST (Updated: 19 March 2020 1:55 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் காரணமாக சென்னை வந்து செல்லவேண்டிய 62 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆலந்தூர், 

சீனாவை தொடர்ந்து உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. விமான பயணங்களால் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற பீதியால் விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பயணிகள் எண்ணிக்கை குறைவால் குவைத்தில் இருந்து வரவேண்டிய 3 விமானங்கள், இலங்கையில் இருந்து 4 விமானங்கள், மலேசியாவில் இருந்து 6, துபாயில் இருந்து 2 மற்றும் தோகா, சிங்கப்பூர், பக்ரைன், ஜெர்மனி ஆகிய இடங்களில் இருந்து வரவேண்டிய விமானங்கள் உள்பட சென்னை வரவேண்டிய 23 விமானங்களும், அதேபோல் சென்னையில் இருந்து மேற்கண்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய 23 விமானங்களும் என 46 பன்னாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

அதேபோல் சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து ஐதராபாத், பெங்களூரு, கொச்சி, மும்பை, புனே, தூத்துக்குடி, திருச்சி, கோவா ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய 8 விமான சேவைகளும், மீண்டும் அதே நகரங்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வரவேண்டிய 8 விமான சேவைகள் என 16 உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

ஒரே நாளில் 62 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் இல்லாமல் சென்னை விமான நிலையமே வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story