அருப்புக்கோட்டையில் ஜவுளிகள் தேக்கம்; நெசவாளர்கள் வேதனை
அருப்புக்கோட்டையில் ஜவுளி உற்பத்தி முடங்கி கோடிக்கணக்கில் உற்பத்தி செய்த சேலைகள் தேக்கம் அடைந்து விற்பனை செய்யமுடியாமல் உள்ளதால் நெசவாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்திக்கு பெயர் பெற்ற ஊர் அருப்புக்கோட்டை. அங்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 25 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இங்கு உற்பத்தி செய்யும் சேலை ரகங்கள் ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா மற்றும் வட மாநிலங்களுக்கு அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. விலை குறைவாக இருப்பதால் திரைப்படத் துறையினரும் அருப்புக்கோட்டையில் சேலைகள் வாங்கிச்செல்வார்கள். இந்த நிலையில் ஏற்கனவே ஜி.எஸ்.டி.யால் ஜவுளி உற்பத்தி தொழில் பாதிப்புக்குள்ளாகி இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பிரச்சினையால் பொதுமக்கள் அதிகஅளவில் கூடும் திருப்பூர் பனியன் சந்தை, ஈரோடு ஜவுளி சந்தை போன்ற பெரிய சந்தைகள் மூடப்பட்டு விட்டன. இந்த சந்தையில்தான் வாராவாரம் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்து பலகோடி ரூபாய்களுக்கு சேலை ரகங்கள் கொள்முதல் செய்து விற்பனைக்காக வாங்கிச் செல்வார்கள். அருப்புக்கோட்டையில் உற்பத்தி செய்த சேலை ரகங்கள் 60 சதவீதம் சந்தைகளிலும் மேலும் மீதம் உள்ள சேலைகளை வட மாநிலங்களுக்கு கடனுக்கு விற்பனை செய்து தொழிலை நடத்தி வந்தனர்.
தற்போது பெரிய ஜவுளி சந்தைகள் மூடியதாலும், திருவிழா நடத்துவதற்கு அரசு தடையும் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மண்டபம் வழங்காததாலும் சேலை விற்பனை செய்ய முடியாமலும் வடமாநிலங்களுக்கு ஜவுளி ரகங்களை அனுப்ப முடியாமலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஜவுளிகள் தேங்கி கிடக்கின்றன.
இதனால் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு வரவேண்டிய பணம் வராததால் பாவு, நூல், ஜவுளி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை வாங்க முடியாமலும் நெசவாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாமலும், வங்கியில் வாங்கிய கடனை திருப்ப செலுத்த முடியாமலும் திணறி வருகின்றனர்.
ஜவுளிகள் தேங்கிக்கிடப்பதால் நெசவாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகி இருக்கிறது. அனைவரும் அச்சம் அடைந்துள்ளார்கள்.
மத்திய அரசு ஜவுளி உற்பத்தியாளர்கள் கட்ட வேண்டிய ஜி.எஸ்.டி. யையும் வங்கியில் வாங்கிய கடனுக்கு உண்டான வட்டியையும் 3 மாதங்கள் ரத்துசெய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கொரோனா வைரஸ் பிரச்சினை முடியும் வரை தமிழக அரசு பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியது போல் நெசவாளர்களுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story