உத்தரபிரதேசத்தில் பிடிபட்டனர்: தேவகோட்டை வந்த ஆம்னி பஸ்சில் நகை திருடிய இளம்பெண் உள்பட 3 பேர் கைது


உத்தரபிரதேசத்தில் பிடிபட்டனர்: தேவகோட்டை வந்த ஆம்னி பஸ்சில் நகை திருடிய இளம்பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 March 2020 9:45 PM GMT (Updated: 18 March 2020 9:31 PM GMT)

தேவகோட்டையில் வந்த ஆம்னி பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் நகை திருடிய வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேவகோட்டை, 

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே நெய்வயல் கிராமத்தை சேர்ந்தவர் காளேஸ்வரி (வயது 52). இவரது கணவர் இறந்துவிட்டார். இவர் தனது மகள்களுடன் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவரது ஒரு மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக கடந்த நவம்பர் மாதம் சென்னையிலிருந்து ஒரு தனியார் ஆம்னி பஸ்சில் டிக்கெட் பதிவு செய்து தேவகோட்டைக்கு பயணம் செய்து வந்தார். பயணத்தின்போது தனது பையில் 44 பவுன் தங்க நகைகளை மகள் திருமணத்திற்காக கொண்டு வந்தார்.

தேவகோட்டை பஸ் நிலையம் அருகே இறங்கி தனது பையை சோதனை செய்தபோது நகைகள் காணாமல் போனதை கண்டு அதிச்சியடைந்து, தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் வடமாநில கும்பல் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் உத்தரவின்பேரில், தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி உமா, தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், ராமச்சந்திரன், ஏட்டுகள் ஜான் கண்ணடி, ஆரோக்கியசாமி ஆகியோர் கொண்ட தனிப்படை டெல்லி விரைந்தது. அங்கு தமிழ்நாடு பட்டாலியன் போலீஸ் படையுடன், உத்தரபிரதேச மாநிலம் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த நகை திருட்டு சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட முசாபர் (44), ஆஷ்முகமது (42) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின்போது நகைகளை திருடி நகைக்கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் இந்த திருட்டில் தொடர்புடைய நித்திவர்மா (22) என்ற இளம்பெண்ணையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.7 லட்சத்து 70 ஆயிரத்தை போலீசார் மீட்டனர்.

இவர்களிடம் விசாரணை நடத்தியதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இவர்கள் கோவை மாவட்டத்தில் 5½ கிலோ தங்கம் கடத்தலில் தொடர்புடையவர்கள் என்பதும், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இரவு நேரங்களில் பஸ்களில் பயணம் செய்வதுபோல் விழித்திருந்து பயணிகள் தூங்கிய பின்பு அவர்கள் வைத்திருக்கும் பொருட்களை திருடிவந்ததும் தெரியவந்தது. கைதான 3 பேரையும் போலீசார் தேவகோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story