சிவகங்கை மாவட்டத்தில் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட்ட போலீசார்
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முதல் போலீசார் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
காரைக்குடி,
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். இதையடுத்து உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிலையில் மத்திய-மாநில அரசுகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு இந்த கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தும், மக்கள் கூடும் நிகழ்ச்சியை தவிர்க்கவும் அறிவுறுத்தி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போலீசாரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முதல் கட்டமாக நேற்று முதல், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் தலைமையில் மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டனர். முன்னதாக காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் மாசி-பங்குனி திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், பூக்குழி இறங்குதல், முளைப்பாரி எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனால் காரைக்குடி நகர் முழுவதும் நேற்று கூட்டமாகவே காணப்பட்டது.
இதையொட்டி ஏராளமான போலீசார் காரைக்குடியில் குவிக்கப்பட்டனர். காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையில், போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் சில போலீசார் மக்கள் கூடும் இடத்தில் முகக்கவசம் அணியும் நோக்கம், கைகளை கழுவும் முறை உள்ளிட்டவை குறித்து சிறிய மைக் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இது குறித்து காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் கூறியதாவதுடு:-
தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும். மக்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சியை தவிர்க்க வேண்டும். கைகளை நன்றாக கழுவி அதன் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டும். மேலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு இந்த கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் திருப்பாச்சேத்தி போலீஸ் நிலையத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க போலீசார் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் நிலையம் வெளியே கைகழுவும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் கெரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story