கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும்


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 18 March 2020 11:30 PM GMT (Updated: 18 March 2020 9:40 PM GMT)

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் பேட்டியின்போது கூறினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் ஏற்பட வில்லை. சுகாதாரத்துறை அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் 2 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர் என்ற செய்தி மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த மாவட்டத்தில் பாதிப்பு இல்லை. மலப்புரம் மாவட்டத்தில் 2 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

கேரளா, கர்நாடகா எல்லைகளையொட்டி நீலகிரி அமைந்து உள்ளதால், அம்மாநிலங்களுக்கு சென்று வரும் பயணிகளை சோதனைச்சாடிகளில் மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இந்த கண்காணிப்பின் போது, கேரளாவுக்கு சென்று வந்த 3 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டாலும், வீட்டில் வைத்தே தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளுக்கு சென்று வந்த 5 பேருக்கு பாதிப்பு ஏதும் இல்லை. அவர்கள் சென்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.

தவிர்க்க வேண்டும்

இது மக்களுக்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும். கூடலூர் ஓவேலி பகுதியை சேர்ந்த ஒருவர், கோழிக்கோடு விமான நிலையத்தில் சமையலராக இருந்து உள்ளார். அவர் அங்கிருந்து கூடலூர் வந்த போது லேசான காய்ச்சல் காரணமாக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவரிடம் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை. கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் உண்மை இல்லை.

இதுகுறித்து சுகாதார அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரே பொதுமக்கள் நம்ப வேண்டும். மளிகை கடைகள், உணவு பொருட்கள் விற்பனை கடைகள், உழவர் சந்தை, இறைச்சி கடைகள் போன்றவற்றை மூடும் எண்ணம் இல்லை. கோவில் திருவிழாக்கள், தேவாலயங்களில் நடைபெறும் ஆராதனைகள், மசூதிகளில் கூட்டம் அதிகமாக சேர்வதை தவிர்க்க வேண்டும்.

அரசு பஸ்கள் நிறுத்தம்

நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு, கண்ணூர், நிலம்பூர், பாலக்காடு மற்றும் கர்நாடகா மாநிலம் மைசூரு, பெங்களூரு, மடிக்கேரி செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு அனைத்து மக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கும், சுகாதாரத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கேரள மாநிலத்தையொட்டி உள்ள நீலகிரியில் குரங்கு காய்ச்சல், பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை. இருந்தாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உடனிருந்தார்.

Next Story