குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் போராட்டம்
x
தினத்தந்தி 18 March 2020 11:00 PM GMT (Updated: 18 March 2020 10:07 PM GMT)

சென்னையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, 

குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகியவற்றுக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (சென்னை மண்டலம்) சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டத்தை தள்ளிவைக்குமாறு பல்வேறு தரப்பில் இருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆனாலும் திட்டமிட்டபடி சென்னை பிராட்வே குறளகம் அருகே நேற்று போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட தலைவர் எம்.ஏ.ஷாகுல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அபிபுல்லா பாஷா முன்னிலை வகித் தார். மாநில பொதுச்செயலாளர் இ.முகமது, பொருளாளர் அப்துல்ரஹீம் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

சட்டசபையில் தீர்மானம்

போராட்டம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் இ.முகமது நிருபர்களிடம் கூறுகையில், “தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு உடனடியாக சட்டசபையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும். தமிழக அரசு செவிசாய்க்காவிட்டால் தொடர் போராட்டங்களையும் முன்னெடுக்க திட்டமிட்டு உள்ளோம்” என்றார்.

காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 1 மணிக்கு நிறைவுக்கு வந்தது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று 36 இடங்களில் போராட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் திருவள்ளூர் மாவட்டம் சார்பாக ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அஜாஸ் அஹமது தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தாவூத் கைசர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story