கொரோனா வைரஸ் எதிரொலி: கோவில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகள் கலை நிகழ்ச்சிக்கு தடை


கொரோனா வைரஸ் எதிரொலி: கோவில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகள் கலை நிகழ்ச்சிக்கு தடை
x
தினத்தந்தி 18 March 2020 11:00 PM GMT (Updated: 18 March 2020 10:15 PM GMT)

கொரோனா வைரஸ் எதிரொலியாக கோவில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் விழாக்களில் நடத்தப்படும் கரகாட்டம், பாட்டு கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி, சித்திரை மாதங்களில் கோவில் திருவிழாக்கள் நடைபெறும். கோவில் திருவிழாவின் போது கரகம் எடுத்தல், முளைப்பாரி, அக்னி சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளும், இரவு நேரத்தில் கரகாட்டம், பாட்டு கச்சேரி, ஆடல்-பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம். பொதுவாக ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்த தடை உள்ள நிலையில், ஒவ்வொரு கிராம கமிட்டியின் மூலம் கோர்ட்டு உத்தரவு பெற்று கட்டுப்பாடுகளுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், பொது இடங்களில் மக்கள் கூடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்

இதற்கிடையே கொரோனா வைரஸ் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இந்த ஆண்டு பங்குனி, சித்திரை திருவிழாக்கள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வருகிற 31-ந்தேதி வரை கட்டுப்பாடுகளை விதித்துள்ள அரசு, கொரோனா வைரஸ் பரவலை கண்காணித்து அதன்பின்னர் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படலாம் அல்லது தளர்த்தப்படலாம் என்று அறிவித்துள்ளது. இருப்பினும் கோவில் திருவிழாக்கள் நடத்த விரும்பும் கிராமங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. அதிகமான மக்களை ஒரே இடத்தில் கூட்டாமல் போதுமான பாதுகாப்புடன் விழாக்களை நடத்த வேண்டும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் திருவிழா தவிர, திருவிழா அன்று பிரதானமாக நடைபெறும் கரகாட்டம், ஆடல்-பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Next Story