கொரோனா வைரஸ் எதிரொலி: விழுப்புரம் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


கொரோனா வைரஸ் எதிரொலி: விழுப்புரம் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 19 March 2020 5:30 AM IST (Updated: 19 March 2020 4:14 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் எதிரொலியினால் விழுப்புரம் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு அரங்குகள், டாஸ்மாக் பார்கள் ஆகியவற்றை வருகிற 31-ந் தேதி வரை மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் 13 வட்டார பகுதிகளில் மருத்துவ குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதோடு இந்நோயை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மூடல்

அதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களான சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு அரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவை நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டுள்ளன. நேற்றும் இவை மூடியே கிடந்தது.

சாலைகள் வெறிச்சோடின

கொரோனா வைரஸ் எதிரொலியினால் பெரும்பாலானோர் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் எப்போதும் பரபரப்பாகவும், மக்கள் நடமாட்டமும் மிகுந்து காணப்படும் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன. விழுப்புரம் நகரில் சென்னை-திருச்சி நெடுஞ்சாலை, நேருஜி சாலை, கே.கே.சாலை, திரு.வி.க. சாலை உள்ளிட்ட சாலைகளில் குறைந்த அளவில் வாகனங்கள் இயக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அதுபோல் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் மிகவும் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் மார்க்கெட்டுகள், கடை வீதிகளிலும் வழக்கத்திற்கும் மாறாக மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா வைரஸ் எதிரொலியினால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story