மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக தர்மாதிகாரி நியமனம்


மும்பை ஐகோர்ட்டு   தலைமை நீதிபதியாக தர்மாதிகாரி நியமனம்
x
தினத்தந்தி 19 March 2020 5:34 AM IST (Updated: 19 March 2020 5:34 AM IST)
t-max-icont-min-icon

மும்பை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக தர்மாதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை, 

மும்பை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்தவர் பிரதீப் நந்திரஜோக். இவர் கடந்த மாதம் 21-ந் தேதியுடன் பணி ஓய்வு பெற்றதை அடுத்து, மும்பை ஐகோர்ட்டின் மூத்த நீதிபதியான தர்மாதிகாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு இருந்தார்.

இந்தநிலையில் நேற்று மத்திய நீதி மற்றும் சட்ட அமைச்சக இணை செயலாளர் ராஜிந்தர் கஷ்யாப் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், “மும்பை ஐகோர்ட்டு பொறுப்பு நீதிபதியான தர்மாதிகாரியை மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமனம் செய்து ஜனாதிபதி உத்தரவிட்டு உள்ளார். பதவி ஏற்கும் நாளில் இருந்து அவர் மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக செயல்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தர்மாதிகாரி 16 ஆண்டுகள் மும்பை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றியவர். 1959-ம் ஆண்டு பிறந்த அவர், நாக்பூரில் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தவர். இவர் கடந்த 2004-ம் ஆண்டு மும்பை ஐகோா்ட்டு கூடுதல் நீதிபதி ஆனார். 2006-ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

முக்கிய வழக்குகள்

தர்மாதிகாரி தலைமையிலான அமா்வு கடந்த ஆண்டு தாய், மனைவி மற்றும் 2 வயது மகளை கொலை செய்த 25 வயது வாலிபரின் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு கூறியது. பிரீத்தி ரதி என்ற பெண்ணை திராவகம் வீசி கொலை செய்த அங்குர்(26) என்பவரின் தூக்கு தண்டனையை குறைத்து தீர்ப்பு அளித்தார்.

இதேபோல தமிழ் வாலிபர் ஏஞ்சலோ வல்தாரிசை கொலை செய்த 8 ரெயில்வே போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டவரும் தர்மாதிகாரி தான். மேலும் பல முக்கிய வழக்குகளை தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு விசாரித்து தீர்ப்பு அளித்து உள்ளது.

Next Story