அம்மன் சிலைகளை கீழே தள்ளி சேதம்; பக்தர்கள் அதிர்ச்சி


அம்மன் சிலைகளை கீழே தள்ளி சேதம்; பக்தர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 20 March 2020 3:30 AM IST (Updated: 19 March 2020 5:16 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே அம்மன் சிலைகளை கீழே தள்ளி சேதப்படுத்தி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குடியாத்தம், 

குடியாத்தம் அருகே சேங்குன்றம் கிராமத்தில் பல 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலில் 3¼ அடி உயரத்தில் கருங்கல்லால் ஆன மூலவர் சிலையும், ஐம்பொன்னால் ஆன உற்சவர் சிலையும் உள்ளது.

கடந்த வாரம் இந்த கோவிலில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கிராம மக்கள் தினமும் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.

 இந்த நிலையில் நேற்று காலை கோவில் வழியாக சென்ற கிராம மக்கள் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

 உள்ளே சென்று பார்த்தபோது கோவிலின் உள்ளே மூலவர் சிலையும். உற்சவர் சிலையும் கீழே தள்ளி சேதப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் அங்கிருந்த பொருட்கள் வீசி எறியப்பட்டு இருந்தது. நள்ளிரவு மர்ம நபர்கள் கோவிலுக்கு புகுந்து சிலைகளை சேதப்படுத்தி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து தர்மகர்த்தா செல்வராஜ் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமார், சப்–இன்ஸ்பெக்டர் சரவணன், தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மேலும் இதுதொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

அம்மன் சிலைகளை கீழே தள்ளி சேதப்படுத்திய சம்பவம் பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story