இத்தாலி, பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து திரும்பியவர்கள்: நெல்லை மாவட்டத்தில் 30 பேர் தொடர் கண்காணிப்பு கலெக்டர் ஷில்பா தகவல்


இத்தாலி, பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து திரும்பியவர்கள்: நெல்லை மாவட்டத்தில் 30 பேர் தொடர் கண்காணிப்பு  கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 20 March 2020 4:00 AM IST (Updated: 19 March 2020 8:28 PM IST)
t-max-icont-min-icon

இத்தாலி, பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து திரும்பிய நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 30 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

நெல்லை, 

இத்தாலி, பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து திரும்பிய நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 30 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

8 பேருக்கு சிகிச்சை 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள வார்டுகளில் தினமும் காலை, மாலை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

இந்த ஆஸ்பத்திரியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அதாவது கடையநல்லூரைச் சேர்ந்த வாலிபர், பேட்டையை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், அடையகருங்குளத்தை சேர்ந்த தொழிலாளி, சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி, விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த தொழிலாளி, செங்கோட்டையை சேர்ந்த ஒருவர், பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த ஒரு பெண் உள்பட 8 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் சிலர் சாதாரண வார்டுகளின் மாற்றப்பட்டனர். சிலர் வீட்டுக்கு திரும்பினர். சிலர் கொரோனாவுக்கு முந்தைய வார்டான தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

30 பேர் கண்காணிப்பு 

இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிலர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என டாக்டர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள். அதேபோல் இத்தாலி, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 30 பேர் வீடுகளில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றார்.

64 பஸ்கள் நிறுத்தம் 

தமிழக அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல பொது மேலாளர் துரைராஜ் கூறும் போது, “கொரோனா வைரஸ் காரணமாக பஸ்களில் பயணிகளின் கூட்டம் குறைந்து விட்டது. அதனால் பல வழி தடங்களில் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மதுரை, கோவில்பட்டி, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாங்குநேரி, சேரன்மாதேவி, வள்ளியூர், திசையன்விளை உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்கள் குறைக்கப்பட்டு உள்ளன. நெல்லை, தூத்துக்குடியை உள்ளடக்கிய நெல்லை மண்டலத்தில் 901 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் காரணமாக 64 பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன“ என்றார்.

Next Story