தரிசு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு வழங்கக்கூடாது ; ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்


தரிசு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு வழங்கக்கூடாது ; ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 20 March 2020 3:45 AM IST (Updated: 19 March 2020 8:39 PM IST)
t-max-icont-min-icon

அனுக்கூரில் தரிசு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு வழங்கக்கூடாது என்று ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேப்பந்தட்டை, 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அனுக்கூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகே சுமார் 2 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. இந்த நிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் விரிவாக்கம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி விரிவாக்கம் போன்ற தேவைகளுக்காக பயன்படுத்த வேண்டும் என ஊர் கிராம மக்கள் முடிவு செய்து வைத்து இருந்தனர். 

இந்நிலையில் நீர்வழி தடங்களில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளைக்கட்டி குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தி அவர்களுக்கு அனுக்கூரில் உள்ள 2 ஏக்கர் தரிசு நிலத்தில் பட்டா வழங்க வருவாய்த்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற அவசர கூட்டத்தை கூட்டினர். கூட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள 2 ஏக்கர் தரிசு நிலத்தை அனுக்கூர் கிராம மக்களின் பொது தேவைக்காக பிற்காலத்தில் பயன்படுத்த வேண்டும். 

எனவே இந்த தரிசு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு வழங்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் நகலில் ஊராட்சி மன்ற தலைவர் முதலி மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் கையெழுத்திட்டு வேப்பந்தட்டை தாசில்தார் கவிதாவை நேரில் சந்தித்து அனுக்கூரில் உள்ள தரிசு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுவாக கொடுத்துள்ளனர். இதனால் நேற்று வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story