திசையன்விளையில் நகைக்கடைகளில் திருடிய 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது 5½ பவுன் நகை மீட்பு


திசையன்விளையில் நகைக்கடைகளில் திருடிய 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது  5½ பவுன் நகை மீட்பு
x
தினத்தந்தி 20 March 2020 3:00 AM IST (Updated: 19 March 2020 8:52 PM IST)
t-max-icont-min-icon

திசையன்விளையில் நகைக்கடைகளில் திருடிய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திசையன்விளை, 

திசையன்விளையில் நகைக்கடைகளில் திருடிய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 5½ பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

நகைக்கடையில் திருட்டு 

நெல்லை மாவட்டம் திசையன்விளை பஜாரில் நகைக்கடை நடத்தி வருபவர் திருவடி முத்து. கடந்த 5–ந்தேதி இவரது கடையில் நகை வாங்குவது போன்று 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் வந்தனர். அவர்கள் கடை ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி, 4 பவுன் நகையை நைசாக திருடிச் சென்றனர். இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணா நகரைச் சேர்ந்த சந்தானம் மனைவி லட்சுமி (வயது 60), விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாயல்பட்டி சக்திவேல் நகரைச் சேர்ந்த கருப்பசாமி (46), அவருடைய மனைவி பாண்டீசுவரி (41) ஆகிய 3 பேரும் சேர்ந்து, திருவடிமுத்துவின் நகைக்கடையில் நகை வாங்குவது போன்று நடித்து, 4 பவுன் நகையை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 4 பவுன் நகையை மீட்டனர்.

3 பேர் சிறையில் அடைப்பு 

இதற்கிடையே கைதான லட்சுமி, பாண்டீசுவரி ஆகிய 2 பேரும் சேர்ந்து, கடந்த 2012–ம் ஆண்டு திசையன்விளை பஜாரில் கணேசனுக்கு சொந்தமான நகைக்கடையில் நகை வாங்குவது போன்று நடித்து, 2 பவுன் நகையை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வழக்கிலும் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 1½ பவுன் நகையை மீட்டனர்.

கைதான லட்சுமி, பாண்டீசுவரி, கருப்பசாமி ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் கருப்பசாமியை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், லட்சுமி, பாண்டீசுவரி ஆகிய 2 பேரையும் கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும் போலீசார் அடைத்தனர்.

Next Story