கொரோனா வைரஸ் எதிரொலி: வாரச்சந்தைகள் 31-ந்தேதி வரை மூடல்
கொரோனா வைரஸ் எதிரொலியாக வாரச்சந்தைகள் 31-ந்தேதி வரை மூடப்படுகிறது. மேலும், திருக்காம்புலியூரில் அம்மா பூங்கா அடைக்கப்பட்டது.
தரகம்பட்டி,
தமிழக அரசு உத்தரவின்பேரில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கொரோனா வைரஸ் நோய் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்தந்த ஒன்றிய ஆணையர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதில் கடவூர் ஒன்றியத்தில் உள்ள காணியாளம்பட்டி, சுண்டு குழிப்பட்டி, பாரப்பட்டி, தரகம்பட்டி, பாலவிடுதி, தளிவாசல், வீரணம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வாரச்சந்தைகள் வருகிற 31-ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும். அடுத்த உத்தரவு வரும் வரை வாரச்சந்தைகள் நடத்தக்கூடாது எனவும், மக்கள் இந்த இடங்களில் அதிகம் கூட வேண்டாம் எனவும் ஒன்றிய நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், தோகைமலை ஒன்றியத்தில், காவல்காரன்பட்டியில் வாரச்சந்தைகள் வருகிற 31-ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும். மறுஉத்தரவு வரும் வரை வாரச்சந்தைகள் இயங்காது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், திருக்காம்புலியூரில் இயங்கி வந்த அம்மா பூங்கா கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மூடப்பட்டது. மேலும் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள மாயனூர், லாலாபேட்டை, கொசூர், இரும்பூதிப்பட்டி, சேங்கல், பழையஜெயங்கொண்ட சோழபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வாரச்சந்தைகள் வருகிற 31-ந்தேதி வரை இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story