நெல்லையில் பயங்கரம்: பால் வியாபாரி அடித்துக் கொலை வெறிச்செயலில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரர் கைது
நெல்லையில் பால் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை,
நெல்லையில் பால் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.
பால் வியாபாரி
நெல்லை வண்ணார்பேட்டை சாலைத்தெருவை சேர்ந்தவர் ராமையா தேவர் மகன் முப்புடாதி (வயது 34). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார்.
முப்புடாதிக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த அண்ணாமலை (37) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் அண்ணாமலை 10–க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். அந்த ஆடுகள் அடிக்கடி முப்புடாதி வீட்டுக்கு சென்று, அவர்கள் பிடித்து வைத்திருக்கும் தண்ணீரை குடித்துவிட்டு பாத்திரங்களை கவிழ்த்துவிட்டு சென்றுவிடும் என்று கூறப்படுகிறது.
அடித்துக் கொலை
இதேபோல் நேற்று மாலையில் ஆடுகள், முப்புடாதி வீட்டுக்கு சென்று அங்கு இருந்த தண்ணீரை குடித்துவிட்டு சென்றது. இதனை பார்த்த முப்புடாதி ஆடுகளை கம்பால் அடித்து விரட்டி விட்டுவிட்டு, அண்ணாமலையை பார்த்து ஆட்டை, அடுத்தவன் வீட்டிற்குள் வராமல் பார்த்துக்கொள் என்று கூறினார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அண்ணாமலை அருகில் கிடந்த கம்பை எடுத்து முப்புடாதியை சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் படுகாயம் அடைந்த முப்புடாதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
கைது
இதுகுறித்து உடனடியாக பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வெறிச்செயலில் ஈடுபட்ட அண்ணாமலையை கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட முப்புடாதிக்கு லதா என்ற மனைவியும், இசக்கிராஜ், மாடசாமி ஆகிய மகன்களும், ராஜலட்சுமி, முருகலட்சுமி ஆகிய மகள்களும் உள்ளனர். நெல்லையில் பால் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story